ADDED : பிப் 21, 2025 02:37 AM

'சென்னையில் நடந்த, 'பார்முலா - 4' கார் பந்தயத்திற்கு தனியார் நிறுவனம் பணம் தர வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சென்னையில், மூன்று ஆண்டுகளுக்கு பார்முலா - 4 கார் பந்தயம் நடத்துவதற்காக தனியார் அமைப்புடன் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒப்பந்தம் போட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31 மற்றும் செப்., 1ல் இந்த கார் பந்தயங்கள் சென்னையின் மையப்பகுதியான அண்ணா சாலையில் நடந்தது.
இதற்கிடையே, கார் பந்தயத்திற்காக தமிழக அரசு செய்துள்ள, 42 கோடி ரூபாய் செலவை, அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ள, 'ரேசிங் பிரமோஷன் பிரைவேட் லிமிடெட்' என்ற தனியார் நிறுவனம், தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என்பது உட்பட சில உத்தரவுகளை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்தது. இதை எதிர்த்து, அந்த தனியார் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அதில், 'சென்னையில் நடந்த கார் பந்தயத்துக்கு தமிழக அரசு செலவு செய்த தொகையை தனியார் நிறுவனம் திருப்பி அளிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.
- டில்லி சிறப்பு நிருபர் -