சுங்கத்துறையினர் மீது லஞ்சப்புகார் கூறி சேவையை நிறுத்திய சரக்கு நிறுவனம்; நடந்தது என்ன?
சுங்கத்துறையினர் மீது லஞ்சப்புகார் கூறி சேவையை நிறுத்திய சரக்கு நிறுவனம்; நடந்தது என்ன?
ADDED : அக் 02, 2025 02:08 PM

சென்னை: சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்டு துன்புறுத்துவதால், சேவையை நிறுத்திக்கொள்வதாக, வின்ட்ராக் (Wintrack Inc) என்ற சரக்கு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த லஞ்ச புகாரை சென்னை சுங்கத்துறையினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
வின்ட்ராக் இன்க் என்பது லாஜிஸ்டிக்ஸ் சேவை அளிக்கும் கார்கோ நிறுவனம். இந்த நிறுவனம் இந்தியாவில் தனது சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் மீது லஞ்சப்புகாரை சுமத்தி இருக்கிறது. இது குறித்து வின்ட்ராக் இன்க் நிறுவனம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
அக்டோபர் 1ம் தேதி முதல், எங்கள் நிறுவனம் இந்தியாவில் தனது சேவையை நிறுத்தியது. கடந்த 45 நாட்களாக, சென்னை சுங்க அதிகாரிகள் எங்களை இடைவிடாமல் துன்புறுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு இரண்டு முறை, அவர்களது லஞ்சம் வாங்கும் நடவடிக்கையை அம்பலப்படுத்தினோம். இதனால் அவர்கள் எங்களை பழிவாங்கினர்.
சேவையை தொடர கடினமாக முயற்சிகள் செய்த போதிலும், தொடர்ச்சியான தொந்தரவுகள் காரணமாக எங்களது சேவையை தொடர முடியாமல் போனது. இவ்வாறு அந்நிறுவனம் கூறியிருந்தது. அதேபோல் வின்ட்ராக் இன்க் நிறுவனர் பிரவீன் கணேசனும் சிறப்பு புலனாய்வு பிரிவின் சில அதிகாரிகளை பெயரை குறிப்பிட்டு, லஞ்ச புகாரை முன்வைத்து இருந்தார்.
''தனது மனைவியின் நிறுவனம் ஒரு முறை சரக்கு பெறுவதற்கு ரூ.2.1 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தை நடக்கும் போது அதிகாரிகள் 10 சதவீத தள்ளுபடியும் அளித்தனர்'' என்று, குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். சமூக வலைதளத்தில் வெளியான அவரது பதிவு, பல்வேறு விமர்சனங்களை கிளப்பியது. லஞ்ச புகார் குறித்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அவர், ''உண்மையில் வருத்தம் அளிக்கிறது, ஊழல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது'' என குறிப்பிட்டு இருந்தார். அதேபோல், ஆரின் கேபிட்டலின் தலைவரும், இன்போசிஸின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியுமான மோகன்தாஸ் பாய், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்து, 'எங்கள் துறைமுகங்களில் முறையான ஊழலை ஒழிக்க நீங்கள் தவறிவிட்டீர்கள், தயவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
சுங்கத்துறை மறுப்பு
வின்ட்ராக் இன்க் நிறுவனத்தின் லஞ்ச புகாரை சென்னை சுங்கத்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. சென்னை சுங்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொண்டு வரப்பட்ட சரக்குகள் பற்றி வின்ட்ராக் இன்க் நிறுவனம் தவறான தகவலை வழங்கியிருந்தது. சார்ஜிங் கேபிள்கள் இருப்பது பற்றி குறிப்பிடவில்லை.
பேட்டரி கழிவுகள் மேலாண்மை விதிகளின் படி, EPR சான்றிதழ் எங்களிடம் சமர்பிக்கவில்லை. சுங்கத்துறை விதிகளின்படி விசாரணை நடத்தப்பட்டது. தாமதங்கள் ஏற்கப்பட்டன. இந்த தவறுகளை சரி செய்வதற்கு, அதிகாரிகள் சட்டப்பூர்வ வாய்ப்புகளை வழங்கினர். இதற்காக எந்த லஞ்சமும் சுங்கத்துறை அதிகாரிகள் பெறவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
குறிப்பிட்ட அந்த நிறுவனத்தினர், பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக, சுங்கத்துறையினர் தெரிவித்தனர். விதிகளை மீறும் போது எல்லாம், இவ்வாறு செய்வது அவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது என்றும் அவர்கள் கூறினர்.