பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; சென்னை பெண் இன்ஜினியரிடம் விசாரணை
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; சென்னை பெண் இன்ஜினியரிடம் விசாரணை
ADDED : நவ 07, 2025 01:38 AM

பெங்களூரு: பெங்களூரு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில், குஜராத் சிறையில் இருந்த சென்னை பெண் இன்ஜினியரை, பெங்களூரு போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
பெங்களூரு கலாசி பாளையாவில் உள்ள பள்ளிக்கு, கடந்த ஜூன் 14ம் தேதி, மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வடக்கு மண்டல சைபர் கிரைம் இணை கமிஷனர் நேமகவுடா தலைமையில் விசாரணை நடந்தது.
கலாசிபாளையா பள்ளிக்கு வந்த மின்னஞ்சல் முகவரியில் இருந்து, பெங்களூரின் மேலும் ஐந்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தெரிந்தது. மின்னஞ்சல் முகவரியில் பிரபாகர் என்ற பெயர் இருந்தது.
விசாரணையில், பிரபாகர் சென்னையைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தது. அவரை பிடித்து விசாரித்த போது, தன் முன்னாள் காதலி ரேனி ஜோஷில்டா, 30, பெயரை கூறினார்.
11 மாநில பள்ளிகள் இதையடுத்து, ரேனியை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில், அவரை ஆமதாபாத் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்திருப்பது தெரியவந்தது.
பெங்களூரு மட்டுமின்றி சென்னை, குஜராத், மத்திய பிரதேசம், பஞ்சாப், தெலுங்கானா, ஹரியானா உட்பட 11 மாநில பள்ளிகளுக்கும் ரேனி வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும், 'குஜராத் விமான விபத்துக்கு நான் தான் காரணம் ' என்று, உடுப்பியில் உள்ள பி.ஜே., மருத்துவ கல்லுாரிக்கு மின்னஞ்சல் அனுப்பியதும் தெரிந்தது.
இதையடுத்து, நீதிமன்ற அனுமதி பெற்று, ஆமதாபாத் சிறையில் இருந்த ரேனியை, பெங்களூரு போலீசார், கடந்த மாதம் 28ம் தேதி தங்கள் காவலில் எடுத்து, பெங்களூரு அழைத்து வந்து விசாரித்தனர். சென்னையை சேர்ந்த, 'ரோபோடிக்' இன்ஜினியரான ரேனி, பெங்களூரில் ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்தார்.
அப்போது தன்னுடன் பணிபுரிந்த பிரபாகரை காதலித்தார். ஆனால், சில காரணங்களால் காதல் முறிந்தது.
'டார்க்வெப்' தளம் பிரபாகர் வேறு பெண் ணை திருமணம் செய்தார். அவரை பழிவாங்க நினைத்த ரேனி, பிரபாகர் பெயரில் மின்னஞ்சல் முகவரியை துவங்கி, பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, பிரபாகரை சிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்காக வி.பி .என்., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 'இ - மெயில்' அனுப்பியுள்ளார்.
'டார்க் வெப்' என்ற இணையதளம் மூலமாக பிரைவேட் மொபைல் போன் எண்களை பெற்றுள்ளார்.
இவர், ஆறு முதல் ஏழு, 'வாட்ஸாப்' கணக்கு வைத்திருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிந்தது. விசாரணைக்கு பின், கடந்த மாதம் 31ம் தேதி மீண்டும் குஜராத் அழைத்து செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

