சென்னப்பட்டணா தொகுதி ஒரு ஓட்டின் விலை ரூ.3,000 முதல் 6,000!
சென்னப்பட்டணா தொகுதி ஒரு ஓட்டின் விலை ரூ.3,000 முதல் 6,000!
ADDED : நவ 12, 2024 07:42 PM
சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் ஓட்டுகளை கவர, பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி, காங்கிரஸ் கட்சிகள், ஒரு ஓட்டுக்கு 3,000 ரூபாயில் இருந்து 6,000 ரூபாய் வரை வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேர்தல் வந்து விட்டால், வாக்காளர்களின் நிலையை பயன்படுத்தி கொண்டு, வேட்பாளர்களின் செல்வாக்கை பொறுத்து, வாக்காளர்களுக்கு பணமாகவோ, பொருளாகவோ வழங்கப்படும். பெரும்பாலும் பணம் தான் முதன்மையில் நிற்கும்.
சென்னப்பட்டணா தொகுதி ம.ஜ.த.,வின் குமாரசாமிக்கும், காங்கிரசின் சிவகுமாருக்கும் கவுரவ பிரச்னையாக மாறி உள்ளது. பெங்களூரு ரூரல் தொகுதியில் தன் சகோதரர் சுரேஷை தோற்கடித்த கோபத்தில் சிவகுமார் உள்ளார்.
அதுபோன்று, இத்தொகுதியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதில் தேவகவுடா, குமாரசாமி மும்முரமாக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
வாக்காளர்களின் ஓட்டுகளை பெற, ஜாதி, மதத் தலைவர்களை சந்தித்து ஓட்டு சேகரித்தனர்.
இன்று ஓட்டுப்பதிவு நடக்க உள்ளதால், இத்தொகுதியில் பணப்பட்டுவாடா வேகமாக நடந்து வருகிறது. மூன்று கட்சிகளும் பணத்தை வாரி வழங்கி வருகின்றன.
கடந்த சட்டசபை தேர்தல்லின் போது ஒரு ஓட்டுக்கு 500 முதல் 3,000 ரூபாய் வரை வழங்கி வந்தனர். இம்முறை, 3,000 முதல் 6,000 ரூபாய் வரை வழங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இம்முறை வாக்காளர்களுக்கு மட்டுமின்றி, தொகுதியில் செல்வாக்கு உள்ள தலைவர்களுக்கு, அவர் சார்ந்த சமூக ஓட்டுகள் தங்கள் கட்சிக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக, மூன்று கட்சிகளும் 30,000 முதல் 40,000 ரூபாய் வரை வழங்குவதாகவும் கூறப்படுகிறது.
கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் மீனாவும், 'ஓட்டுக்கு பணம் வினியோகிப்பவர்களை பிடிப்பதற்காக, ஒவ்வொரு தொகுதியிலும் 18 குழுக்கள் அமைத்து உள்ளார்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் 'விஜில்' செயலி மூலம் புகார் அளிக்கலாம்' என்று கூறியுள்ளார்.
ஆனால், 'வாக்காளர்களுக்கு 6,000 ரூபாய் வரை வினியோகித்தும், இதுவரை ஒரு புகார் கூட வரவில்லை' என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -