ADDED : அக் 16, 2024 10:27 PM

சிக்கபல்லாபூர் : சென்னப்பட்டணா காங்கிரஸ் வேட்பாளராக, முன்னாள் எம்.பி., சுரேஷ் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்று, சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் கூறினார்.
சிக்கபல்லாபூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
இடைத்தேர்தல் நடக்கும் ஷிகாவி, சண்டூர், சென்னப்பட்டணாவில் எங்கள் சக்தியை பயன்படுத்தி, வெற்றி பெறுவோம். பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியில் பிரச்னை உள்ளது.
இது எங்களுக்கு கண்டிப்பாக சாதகமாக அமையும். சென்னப்பட்டணாவில் பா.ஜ., யோகேஸ்வருக்கு சீட் கொடுக்க, குமாரசாமி கண்டிப்பாக விட மாட்டார்.
அந்த தொகுதியில் குமாரசாமியின் மனைவி அனிதா அல்லது மகன் நிகில் போட்டியிட வாய்ப்பு உள்ளது. யோகேஸ்வருக்கு சீட் கிடைக்காவிட்டால், அவரது ஆதரவாளர்கள் கண்டிப்பாக வேலை செய்ய மாட்டார்கள்.
எங்கள் கட்சியில் அப்படி ஒரு பிரச்னை இல்லை. துணை முதல்வர் சிவகுமார் போட்டியிடுவதாக கூறி உள்ளார்.
அவரது தம்பியும், முன்னாள் எம்.பி.,யுமான சுரேஷ் கூட போட்டியிட வாய்ப்பு உள்ளது. அவர் வேட்பாளர் ஆக வேண்டும் என்பது, எங்கள் ஆசை.
சுரேஷ் போட்டியிட்டால், அவரது வெற்றிக்காக வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்ய, காங்கிரசில் முதல் முறை எம்.எல்.ஏ., ஆனவர்கள் முடிவு செய்து உள்ளோம்.
எங்களுடன் சேர்ந்து, சுரேஷும் விதான் சவுதா வர வேண்டும். அவரது வழிகாட்டுதல் எங்களுக்கு மிகவும் முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.