செஸ் ஒலிம்பியாட்; ஆரம்பமே வேற லெவல்: முதல் வெற்றியை தட்டி துாக்கிய பிரக்ஞானந்தா, வைஷாலி
செஸ் ஒலிம்பியாட்; ஆரம்பமே வேற லெவல்: முதல் வெற்றியை தட்டி துாக்கிய பிரக்ஞானந்தா, வைஷாலி
ADDED : செப் 12, 2024 09:15 AM

ஹங்கேரி: செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு வெற்றிகரமான துவக்கம் பெற்றுத்தந்தனர்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில், இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை செஸ் ஒலிம்பியாட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 45வது சீசன் 98 ஆண்டுக்குப் பின், மீண்டும் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் துவங்கி உள்ளது. வரும் செப். 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஓபன் பிரிவில் 191 அணிகளும், பெண்கள் பிரிவில் 180 அணிகளும் போட்டியிடுகின்றன. செஸ் ஒலிம்பியாட்டில், ஒவ்வொரு அணியும் 11 சுற்றுகளில் 11 அணிகளை எதிர்கொள்ள வேண்டும்.
இந்தியா சார்பில், ஓபன் பிரிவில் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, டி குகேஷ், விதித் குஜராத்தி, பென்டலா ஹரிகிருஷ்ணா ஆகியோர் அடங்கிய அணி களம் இறங்கியது. மகளிர் பிரிவில், ஹரிகா துரோனவல்லி, வைஷாலி, திவ்யா தேஷ்முக வன்டிகா அகர்வால், தானியா சச்தேவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி களம் இறங்கியது. முதல் சுற்றிலேயே இந்தியா அணி சாதித்து விட்டது.
பிரக்ஞானந்தா 'டாப்'
ஓபன் பிரிவில் மொராக்கோவை எதிர்கொண்ட இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா, அர்ஜுன் எரிகேசி, விதித் குஜராத்தி தலா 1 புள்ளி பெற்று மொராகோவை ஒயிட் வாஷ் செய்தனர். பிரக்ஞானந்தா தனது எதிர் அணி வீரர் 47 வயது முகமது திசிரை, 18வது நகர்வில் இருந்தே கடுமையான நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கினார்.
வைஷாலி பிரமாதம்
மகளிர் பிரிவில் ஜமைக்காவை எதிர்கொண்ட இந்திய அணி 3.5 - 0.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. வைஷாலி, திவ்யா தேஷ்முக், தானியா சச்தேவ் தலா ஒரு புள்ளி, வந்திகா அகர்வால் டிரா செய்து 0.5 புள்ளி பெற்று வெற்றி பெற்றனர். முதல் சுற்றில் இந்திய ஆடவர் அணி மொராக்கோவையும், மகளிர் அணி ஜமைக்காவையும் வீழ்த்தியது. 11 சுற்றுகள் முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வெல்லும்.