ADDED : டிச 20, 2024 05:44 AM

சதுரங்க விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், உத்தரகன்னடா மாவட்ட பஞ்சாயத்து, மாவட்டத்தின் மூன்று இடங்களில், சதுரங்க பூங்கா அமைப்பதில் ஈடுபட்டுள்ளது.
மூளைக்கு வேலை தரும் விளையாட்டுகளில், சதுரங்கமும் ஒன்றாகும். இந்த விளையாட்டில் சிறார்களை ஊக்கப்படுத்த, உத்தரகன்னடா மாவட்ட பஞ்சாயத்து ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக மாவட்ட பஞ்சாயத்து சி.இ.ஓ., ஈஸ்வர் காந்து முயற்சியால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், 'செஸ் பார்க்' அமைக்கப்படுகிறது.
சிறார்கள், இளைஞர்கள், முதியவர்கள் என, அனைவரும் விளையாடும் வகையில் அனைத்து வசதிகளும் அடங்கிய அழகான பூங்காக்கள் உருவாகின்றன. கார்வார் தாலுகாவின் சித்தாகுலா, குமட்டாவின், ஹெக்டே, தான்டேலியின் அம்பேவாடி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில், 'செஸ் பார்க்' தயாராகிறது.
உலகின் பிரபலமான சதுரங்க விளையாட்டு வீரர்களின் ஊக்கமளிக்கும் வாக்கியங்கள், சதுரங்கம் சம்பந்தப்பட்ட சுவாரஸ்யமான அம்சங்கள், காம்பவுண்ட் சுவற்றில் வரையப்படுகின்றன. பூங்காவில் ஆங்காங்கே சதுரங்க விளையாட்டு பலகைகள் பொருத்தப்படுகின்றன. பூங்காவின் ஒரு ஓரத்தில் மேடை கட்டப்படுகிறது. சதுரங்க விளையாட்டு பயிற்சி பெற விரும்புவோருக்கு பயிற்சியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இது குறித்து, மாவட்ட பஞ்சாயத்து ஈஸ்வர் காந்து கூறியதாவது:
உத்தரகன்னடா மாவட்டத்தின் சிர்சியில் மட்டுமே, செஸ் பயிற்சி மையங்கள் உள்ளன. கடலோர பகுதி உட்பட, மற்ற இடங்களில் பயிற்சி மையங்கள் இல்லை என்பதை, நான் கவனித்தேன். செஸ் தொடர்பாக, சிறார்களுக்கும், பொது மக்களுக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில், 'செஸ் பார்க்' அமைக்கப்படுகிறது.
செஸ் பயிற்சி பெற விரும்புவோருக்கும், இந்த பார்க் உதவியாக இருக்கும். நகர்ப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில், செஸ் பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. இதனால் நகர்களில் வசிப்போருக்கும் வசதியாக இருக்கும். இதே காரணத்தால் இத்தகைய இடங்களை தேர்வு செய்கிறோம்.
ஒவ்வொரு பார்க்கிலும், சராசரியாக 15 முதல் 20 செஸ் டேபிள்கள் பொருத்தப்படும். இந்த டேபிள்களில் தலா ஒரு செஸ் போர்டு வைக்கப்படும். தினமும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும், செஸ் விளையாட அனுமதி அளிக்கப்படும்.
பொழுது போக்குக்கு செஸ் விளையாடுவோருக்கு மட்டுமின்றி, செஸ் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, உயர் தரமான பயிற்சி அளிக்கவும், ஏற்பாடு செய்யப்படும்.
செஸ் விளையாட தெரியாதோருக்கு, பயிற்சி அளிக்க பயிற்சியாளர் இருப்பார். உள்ளூர் பயிற்சியாளர்கள் பணியாற்ற முன் வந்தால், அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். செஸ் பார்க்குகளை கிராம பஞ்சாயத்து நிர்வகிக்கும். செஸ் பார்க்குகள் அமைக்கும் பணிகள், இறுதி கட்டத்தை எட்டிஉள்ளது.
இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் -.