17 கிராமங்களுக்கு கிடைத்தது மின் வசதி; சத்தீஸ்கரில் நக்சல் ஒழிப்புக்கு கை மேல் பயன்!
17 கிராமங்களுக்கு கிடைத்தது மின் வசதி; சத்தீஸ்கரில் நக்சல் ஒழிப்புக்கு கை மேல் பயன்!
ADDED : மே 16, 2025 04:19 PM

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில நக்சல் பாதிப்புக்குள்ளான 17 கிராமங்களுக்கு முதல் முறையாக மின்சார வசதி கிடைத்துள்ளது.
சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல்கள் ஆதிக்கம் அதிகம். பல்வேறு கிராமங்களில் இவர்களின் கட்டுப்பட்டில் வருவதால் நவீனகால வசதிகள் மட்டுமல்லாது, பன்னெடும் காலமாக மற்றவர்கள் அனுபவித்து வரும் வசதிகள் கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இந் நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் 17 கிராமங்கள் முதல் முறையாக மின்சார வசதியை பெற்றுள்ளன. அம்பாகர்க் சவுக்கி மோஹ்லா, மன்பூர் ஆகிய மாவட்டங்களின் கீழ் உள்ள இந்த கிராமங்கள் அனைத்தும் நக்சல்கள் கட்டுப்பாட்டில் இருந்தவை. மலையும், அடர்த்தியான வனப்பகுதி கொண்ட கிராமங்கள் ஆகும்.
கிட்டத்தட்ட 3 கோடி ருபாய் செலவில் அரசின் திட்டத்தின் கீழ், இந்த கிராமங்களுக்கு மின்சார வசதி கிடைத்துள்ளது. மொத்தம் 540 குடும்பங்கள் மின்சார வசதியை பெறுகின்றனர்.
மின்வசதி கிடைத்துள்ள கிராமங்கள் விவரம் வருமாறு;
கட்டுலிஜோரா, காட்டாபர், போட்ரா, புக்மார்க்கா, சம்பல்பூர், கட்டேகஹான், புக்டா, அமாகோடா, பேட்டமேட்டா, டாட்டேகாசா,குண்டல்கல். ரெய்மன்ஹோரா, நயின்குடா, மெட்டாடோட்கே, கோஹ்கடோலா, எடாஸ்மெட்டா, குஞ்சகன்ஹர்.
17 கிராமங்களுக்கும் மின்வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்பது அரசு அறிவிப்பிலும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் கூறி உள்ளதாவது;
17 கிராமங்களில் 540 குடும்பங்கள் உள்ளன. அவர்களில் 274 குடும்பங்களுக்கு ஏற்கனவே மின் விநியோகம் வழங்கப்பட்டு உள்ளது. மற்ற குடும்பங்களுக்கும் மின்சாரம் பெறும் நடவடிக்கைகள் துவங்கப்பட்டு உள்ளன.
அதிக பாதிப்புக்கு ஆளான பகுதிகளில் முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவதே அரசின் நோக்கம்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.