சீன வெள்ள அபாயங்களை தடுக்கவே சியாங் திட்டம்: அருணாச்சல் முதல்வர்
சீன வெள்ள அபாயங்களை தடுக்கவே சியாங் திட்டம்: அருணாச்சல் முதல்வர்
ADDED : டிச 30, 2024 05:29 AM

இடா நகர்: “மின்சார உற்பத்தி செய்வதற்கு மட்டுமின்றி, சீனாவில் இருந்து வெளியேறும் வெள்ள அபாயத்தை குறைக்கவும், சியாங் மேலடுக்கு பல்நோக்கு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது,” என, அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு தெரிவித்துள்ளார்.
வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் முதல்வர் பெமா காண்டு தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.
இங்குள்ள சியாங் ஆற்றின் குறுக்கே 1.13 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'சம்ப்' எனப்படும் சியாங் மேலடுக்கு பல்நோக்கு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அணை மற்றும் நீர்மின் திட்டத்துடன் கூடியதாக இந்த திட்டம் இருக்கும்.
இதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்துக்கு உள்ளூர் மக்கள் மற்றும் சில சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இந்த திட்டம் குறித்து முதல்வர் பெமா காண்டு நேற்று கூறியதாவது:
தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சியாங் மேலடுக்கு பல்நோக்கு திட்டத்தின் உண்மையான நோக்கமே, சியாங் ஆற்றையும், அதை பல தலைமுறைகளாக நம்பி வாழும் சமூக மக்களையும் காப்பதுமே ஆகும். இந்த திட்டத்துக்கான நிறுவப்பட்ட திறன் 11,000 மெகாவாட். இந்த அணையின் நீர்த்தேக்கம் 900 கோடி கனமீட்டர் கொள்ளளவு கொண்டதாக இருக்கும்.
இது வறண்ட காலங்களில் கூட, நதியின் சீரான ஓட்டத்தை பராமரிப்பதை உறுதி செய்யும்.
இங்கு நீர்மின் உற்பத்தி செய்யப்படுவது முக்கியமல்ல. சியாங் நதியின் இயற்கையான ஓட்டத்தை பராமரிக்கவும், நம் அண்டை நாடான சீனாவில் இருந்து வெளியேற்றப்படும் வெள்ள அபாயங்களை தடுக்கவுமே இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது.
சீன அணைகளில் இருந்து திடீரென நீர் திறக்கப்பட்டால், வெள்ளம் ஏற்பட்டு அருணாச்சல பிரதேசம், அசாம் மற்றும் வங்கதேசம் பேரழிவை சந்திக்கும். அந்த நேரத்தில் இந்த அணை, ஒரு இடையகமாக செயல்படும்.
இந்த திட்டம் குறித்து உள்ளூர் மக்கள் ஒருபோதும் கவலைப்பட வேண்டாம். மக்களிடமும் இது குறித்து கருத்துக்கள் கேட்கப்படும். இந்த திட்டம் குறித்து சில அமைப்புகள் பொய் பிரசாரம் செய்கின்றன.
நம் அண்டை நாடான திபெத்தில், சீனா புதிய அணை கட்ட ஏற்பாடு செய்து வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தும்போது, பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படாவிட்டால், அந்நாடு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
சீனாவின் புதிய அணை கட்டும் திட்டத்தால், பிரம்மபுத்ராவில் இருந்து நீர்வரத்து குறைந்து, சியாங் ஆற்றின் ஓட்டம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. புதிய திட்டத்தை சீனா கவனமுடன் கையாள வேண்டும். அங்குள்ள சூழல், கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

