
* அழகான குரங்கு
கிரிக் பார்ட்டி உட்பட பல திரைப்படங்களில் நடித்தவர் சம்யுக்தா ஹெக்டே. இவர் நடிப்பை விட, சர்ச்சைகளால் அதிகம் பேசப்பட்டவர். இதே காரணத்தால் பட வாய்ப்புகளை இழந்தார். இவர் கடைசியாக கிரீம் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் பெட்டிக்குள் சுருண்டது. அதன்பின் கன்னடத்தில் நடிக்கவில்லை. தமிழில் சில படங்களில் நடித்தார். அங்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. இதற்கிடையே பட வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு, பாலி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள கடற்கரையில் கிளாமராக போட்டோ ஷூட் நடத்தினார். போட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு போட்டோ சம்யுக்தா ஹெக்டே, மரத்தில் ஏறுவது போன்றுள்ளது. இதற்கு ரசிகர் ஒருவர், 'அழகான குரங்கு' என, கமென்ட் செய்துள்ளார்.
* தயாரிப்பாளர்கள் சோகம்
நடிகர் தர்ஷன், பல்லாரி சிறையில், ஜாமின் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இவர் ஒப்புக்கொண்ட புதிய படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என்ன செய்வது என தெரியாமல் கையை பிசைகின்றனர். சில தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தர்ஷனின் பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்வதில், பிசியாக உள்ளனர். இவர் நடிப்பில் 2003ல் திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டான, நம்ம பிரீத்திய ராமு படத்தை புதுப்பொலிவுடன், ரீ ரிலீஸ் செய்ய தயாராகின்றனர். நவம்பர் 1ல் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் நவ்யா நடராஜன் நாயகியாக நடித்திருந்தார். பெங்களூரு, மைசூரு, ஸ்ரீரங்கப்பட்டணா, கரிகட்டா போன்ற அழகான இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருந்தது.
* அன்பு முக்கியம்
தெலுங்கு திரையுலகம் மூலமாக, நடிப்பு பயணத்தை துவங்கியவர் நடிகை ரோஷிணி பிரகாஷ். அதன்பின் கன்னடத்தில் அஜராமரா படத்தில் நடித்த இவர், திரும்பி பார்க்க நேரம் இல்லாமல், ஒன்றன் பின் ஒன்றாக பட வாய்ப்புகள் பெற்ற அதிர்ஷ்டசாலி இவர். ரோஷிணி நாயகியாக நடித்த மர்பி நேற்று முன் தினம், திரைக்கு வந்தது. நன்றாக ஓடுவதால் குஷி அடைந்துள்ளார். இந்த படத்தில் இவர், ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உலகில் அன்பு மட்டுமே முக்கியம். இதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கும் பெண்ணாக தோன்றுகிறார். படத்தில் அழகான காதல் கதை உள்ளது. எதிர்பாராமல் நடிகையான இவர், தற்போது கை நிறைய படங்களை வைத்துள்ளார். மிகவும் சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது, இவரது விருப்பமாம்.
*மர்ம முடிச்சு
பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்துள்ள, ஆப்பரேஷன் டி படத்தின் டீசர், சமீபத்தில் வெளியானது. நடிகர் துருவா சர்ஜா, டீசரை வெளியிட்டு, படக்குழுவினரை வாழ்த்தினார். விரைவில் படம் சென்சாருக்கு அனுப்ப உள்ளனர். இது 2018ல் நடக்கும் கற்பனை கதை. சஸ்பென்ஸ், திரில்லர், மர்டர் மிஸ்டரி கதையாகும். மர்ம முடிச்சுகள் உள்ள படம் என்றாலும், படத்தில் ரத்தம் தென்படாது. ஆக்ஷன் காட்சிகளும் இல்லை. ஆனால் ரசிகர்களை கவரும் என, படக்குழுவினர் நம்புகின்றனர். படத்தில் ஸ்நேஹா பட், வினோத் தேவ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டிசம்பரில் படம் திரைக்கு வரும்.
* கனவு நனவாகுமா?
மக்களை திரையரங்குக்கு வரவழைக்க, படக்குழுவினர் பல வழிகளை கையாள்கின்றனர். மாறுபட்ட டைட்டில் வைக்கின்றனர். வித்தியாசமான கதையை படமாக்குகின்றனர். இந்த வரிசையில் யாகே படமும் சேர்ந்துள்ளது. கன்னடம், தெலுங்கில் தயாராகும் இந்த படத்தை பிரேம் இயக்குகிறார். நாயகனாக உத்தம் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அமிதா ரங்கநாத் நடிக்கிறார். ஒவ்வொருவருக்கும் கனவு இருக்கும். அந்த கனவை நனவாக்குவது எப்படி என்ற கேள்வி எழும். இதுவே படத்தின் கதையாகும். நவம்பரில் படப்பிடிப்பு துவங்குகிறது.
* நிறைவேறிய ஆசை
பெங்கி பட்டனா, குருதேவ் ஹொய்சளா உட்பட மாறுபட்ட கதைகள் கொண்ட படத்தில் நடித்த நடிகர் பிரதாப் நாராயண், ஹீரோவாக மட்டுமின்றி, வில்லனாகவும் அசத்துகிறார். தற்போது சிவராஜ்குமார் நடிக்கும், பைரதி ரனகல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் நவம்பர் 15ல் திரைக்கு வரவுள்ளது. வில்லத்தனம் கொண்ட, அகங்காரமான போலீஸ் அதிகாரியாக தோன்றுகிறார். பிரதாப் நாராயணுக்கு சிறு வயதில் இருந்தே, போலீஸ் அதிகாரியாக வேண்டும் என, ஆசை இருந்ததாம். ஆனால் எதிர்பாராமல் நடிகரானார். அந்த ஆசையை, பைரதி ரனகல் படம் மூலமாக நிறைவேற்றி கொண்டார்.