
ரசிகர்கள் ஏக்கம்
நடிகர் அனந்த் நாக், நடிகை லட்சுமி நடிப்பில், பல ஆண்டுகளுக்கு பின் திரைக்கு வந்த, நா நின்ன பிடலாரே சூப்பர்ஹிட்டாகி, வசூலை அள்ளியது. தற்போது இதே பெயரில் திரைப்படம் திரைக்கு வர தயாராகிறது. இது குறித்து, படக்குழுவினர் கூறுகையில், 'இது திரில்லர், சஸ்பென்ஸ் நிறைந்த கதையாகும். சமீபத்தில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. நாளை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். விரைவில் இரண்டு பாடல்கள், டிரெய்லர் வெளியிடப்படும். படத்தில் அம்பாலி பாரதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த படத்தின் கதை, ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்' என்றனர்.
ரீ ரிலீஸ்
நடிகர் தர்ஷன் நடித்து, வெற்றி பெற்ற நவகிரஹா திரைப்படம், இம்மாதம் 8ம் தேதி, ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனை அவரது சகோதரர் தினகர் துாகுதீப் இயக்கியிருந்தார். படம் ரீ ரிலீஸ் குறித்து, தினகரிடம் கேட்ட போது, ''இது என் இயக்கத்தில் வெளியான 2வது படமாகும். 2008ல் நவம்பர் 7ம் தேதி திரைக்கு வந்து சூப்பர்ஹிட்டானது. படத்தில் ஷர்மிளா மான்ட்ரே, நாகேந்திரா அர்ஸ், தருண் சுதீர், வினோத் பிரபாகர் உட்பட பலர் நடித்துள்ளனர். ரசிகர்களின் வேண்டுகோளுக்கு பணிந்து, இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்கிறோம். ஒன்பது திருடர்கள், மைசூரின் தங்க அம்பாரியை திருட முயற்சிக்கின்றனர். இந்த சதியை முறியடிப்பதே, கதையின் சாராம்சமாகும்,'' என்றார்.
20 ஆண்டுக்கு பின்...
நடிகை வினோதினி என்ற பெயரே, பலருக்கும் மறந்து போயிருக்கும். தமிழில் ஏராளமான படங்களில் நடித்திருந்த இவர், கன்னடத்தில் ஸ்வேதா என்ற பெயரில், சைத்ரத பிரேமாஞ்சலி, கர்பூரத கொம்பே உட்பட, பல வெற்றி படங்களில் நடித்தார். 20 ஆண்டுகளுக்கு பின், கன்னட திரையுலகுக்கு திரும்பியுள்ளார். 2003ல் குடும்பா படத்துக்கு பின், எந்த பட வாய்ப்பையும் ஒப்புக்கொள்ளாத இவர், தற்போது சவுகிதாரா என்ற படத்தில் நடிக்கிறார். இது பற்றி படக்குழுவினர் கூறுகையில், 'இந்த படத்தில் ஸ்வேதா, நாயகி தன்யா ராமின் தாயாக நடிக்கிறார். பிருத்வி அம்பர் நாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பு மும்முரமாக நடக்கிறது' என்றனர்.
இறுதி கட்டம்
சந்துரு தயாரிக்கும், ராஜ்மொகன் இயக்கும், பாதர் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இது குறித்து, இயக்குனர் கூறுகையில், ''துணை இயக்குனராக பணியாற்றிய நான், இப்போது இயக்குனராகி பாதர் படத்தை இயக்குகிறேன். கிருஷ்ணா, பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கிருஷ்ணாவுக்கு ஜோடியாக அம்ருதா அய்யங்கார் நடிக்கிறார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு, பன்னரகட்டாவில் உள்ள வரலாற்று புகழ் பெற்ற சம்பகதாம சுவாமி கோவிலில் நடந்தது. வேறு மொழிகளின் கலைஞர்களும் கூட, இப்படத்தில் நடித்துள்ளனர். வினோத் மாஸ்டர் சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்,'' என்றார்.
வாழ்க்கை போராட்டம்
கூட்லு ராமகிருஷ்ணா இயக்கும், ஷானமொகர மகளு திரைப்படத்தில், மூத்த நடிகர் தேவராஜின் மருமகள் ராகினி பிரஜ்வல், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது தொடர்பாக, இயக்குனர் கூறுகையில், ''படத்தில் ஷான போகரின் மகளாக, ராகினி நடிக்கிறார். இது சுதந்திரத்துக்கு முன் நடக்கும் கதையாகும். தன் வாழ்க்கைக்காக போராடும் பெண்ணாக தோன்றுகிறார். படப்பிடிப்பு முடிந்துள்ளது. படத்துக்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. திப்பு சுல்தான் கதாபாத்திரத்தில் நடிகர் கிஷோர் நடித்துள்ளார். பெங்களூரு, ஸ்ரீரங்கப்பட்டணா, சென்னப்பட்டணா, சிக்கபல்லாபூரில் படப்பிடிப்பு நடத்தினோம்,'' என்றார்.
பெரிய இடத்து மகள்
நடிகர் சிவராஜ்குமாரின் மகள் நிவேதிதா தயாரிப்பில், பட்டர் பிளை படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. இது தொடர்பாக, படக்குழுவினர் கூறுகையில், ''இது நிவேதிதா தயாரிக்கும் முதல் படமாகும். நாயகனாக நடித்த வம்சி, இயக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளார். இவருக்கு ஜோடியாக ரச்சனா இந்தர் நடித்துள்ளார். மூத்த நடிகை சுதாராணி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2023ன் ஜூனில் படப்பிடிப்பை துவக்கினோம். தற்போது முடிந்துள்ளது. டிசம்பரில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.