
தயாரிப்பில் புதுமுகங்கள்
பெரும்பாலும் புதியவர்களே சேர்ந்து தயாரித்துள்ள, அலெமாரி இ பதுகு என்ற படம், திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. சமீபத்தில் படத்தின் டீசர், டிரெய்லர், பாடல்கள் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டன. இதற்கு முன் உதவி இயக்குனராக பணியாற்றிய, சித்து கட்டமனி, அலெமாரி இ பதுகு படத்துக்கு, கதை, திரைக்கதை, உரையாடல் எழுதியுள்ளார். இது நாடோகிகள் பற்றிய படமாகும். எங்காவது ஒரு இடத்தில், நிலையாக தங்கி வாழ வேண்டும் என, போராடு வோரை சுற்றிலும் கதை நகர்கிறது. படத்தில் நடித்துள்ள பலரும், நாடோடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. நம்மை சுற்றி நடக்கும் பல உண்மையான விஷயங்களை படத்தில் காண்பித்துள்ளனர். ரசிகர்களுக்கு பிடிக்கும் என, படக்குழுவினர் நம்புகின்றனர்.
சிவராஜ்குமாருடன் பிரபுதேவா
கரடி படத்துக்கு பின், யோகராஜ் பட் இயக்கும் படம், கரடகா தமனகா. சிவராஜ்குமார், பிரபுதேவா இணைந்து நடிக்கும் இந்த படம், மார்ச் 8ல் சிவராத்திரி நாளன்று திரைக்கு வருகிறது. சில நாட்களுக்கு முன் படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது. மறைந்த நடிகர் அம்பரிஷின் குரலில் 'டைட்டில் டிராக்' வெளியானது. ராக்லைன் வெங்கடேஷ் படத்தை தயாரிக்கிறார். வட கர்நாடகாவில் நடக்கும் கதையை படத்தில் காணலாம். இதில் பிரியா ஆனந்த், ரங்காயனா ரகு, நிஷ்விகா நாயுடு உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஒரு ஊர் மற்றும் தண்ணீரை பற்றிய கதையாகும். மக்களின் மனதில் நீண்ட காலம் நிற்குமாம்.
1990 காதல் கதை
கண் சிமிட்டல் மூலமாக, ஒரே நாளில் பட்டி, தொட்டியெல்லாம் பேசப்பட்டவர் நடிகை பிரியா வாரியர். இவர் கன்னடத்தில் திரைக்கு வர தயாராகும், விஷ்ணு பிரியா என்ற படத்தின் நாயகன், தயாரிப்பாளர் மஞ்சுவின் மகன் ஸ்ரேயஸ் மஞ்சுவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இது 1990ல் நடக்கும் காதல் கதை. ஸ்ரேயஸ் மஞ்சு விஷ்ணுவாகவும், அவரது காதலி பிரியாவாக பிரியா வாரியரும் நடித்துள்ளனர். இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. 1990ல் இருந்ததை போன்று, செட் போட்டு படப்பிடிப்பு நடத்தினர். படத்தின் முதல் பாடல், சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த படம் தனக்கு நல்ல பெயர் பெற்றுத்தரும் என, பிரியா வாரியர் நம்புகிறார்.
வீட்டில் அமர்ந்து பார்க்கலாமா?
ரக்ஷித் ஷெட்டி, ருக்மிணி வசந்த் இணைந்து நடித்த, சப்த சாகரதாச்சே எல்லோ படம் மாறுபட்ட காதல் கதை கொண்டதாகும். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது. தற்போது சத்தமில்லாமல் 'ஓடிடி' தளத்துக்கு வந்துள்ளது. இதுவரை திரையரங்குகளில் ரசித்த படத்தை, ரசிகர்கள் தற்போது வீட்டில் அமர்ந்து பார்க்கலாம். படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகும். படத்தில் மனு கதாபாத்திரத்தில் ரக்ஷித்தும், பிரியா கதாபாத்திரத்தில் ருக்மிணி வசந்தும் நடித்திருந்தனர். இவர்களின் நடிப்பு, பாடல்கள், வசனங்கள் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.
நான்கு வேடங்கள்
தீக்ஷித் ஷெட்டி நாயகனாக நடிக்கும், கேடிஎம் டீசர் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் பாடல்களும் வித்தியாசமாக உள்ளன. சமீபத்தில் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகின. இரண்டுமே லட்சக்கணக்கான மக்களிடம் பாராட்டு பெற்றன. ஒரு பாடலை சஞ்சித் ஹெக்டேவும், மற்றொன்றை அந்தோனி தாஸும் பாடியுள்ளனர். காதல் கதை கொண்ட இதில், தீக்ஷித் நான்கு மாறுபட்ட வேடங்களில் தோன்றுகிறார். காஜல் குந்தர், சஞ்சனா நாயகியாக நடித்துள்ளனர். உடுப்பி, மங்களூரு, கார்கால், பெங்களூரு சுற்றுப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.
நடன திறமைக்கு பாராட்டு
கன்னட நடிகை ஸ்ரீலீலா, கன்னடத்தை விட தெலுங்கில் பிசியாக நடிக்கிறார். ஒன்றன் பின் ஒன்றாக வாய்ப்பு தேடி வருகிறது. ஒரே நாளில் மூன்று படங்களின் படப்பிடிப்பில் பங்கேற்கிறாராம். தன்னை பரபரப்பாக வைத்துக்கொள்வதில் மகிழ்ச்சியாக உணர்கிறார். ஸ்ரீலீலா சிறந்த நடிகை மட்டுமல்ல, திறமையான டான்சரும் கூட. இவரது நடன திறமையை கண்டு, தெலுங்கு ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு வியந்து புகழ்ந்துள்ளார். கன்னடத்தில் நல்ல கதை, கதாபாத்திரம் கிடைத்தால் நடிக்க, ஸ்ரீலீலா தயாராக இருக்கிறாராம்.

