ராஜராஜேஸ்வரி நகர் மண்டலத்தில் தலைமை கமிஷனர் நடைபயணம்
ராஜராஜேஸ்வரி நகர் மண்டலத்தில் தலைமை கமிஷனர் நடைபயணம்
ADDED : டிச 14, 2024 11:16 PM

கெங்கேரி: 'மண்டலத்தை நோக்கி தலைமை கமிஷனரின் நடைபயணம்' என்ற திட்டத்தில், பெங்களூரு மாநகராட்சி தலைமை ஆணையர் துஷார் கிரிநாத், ராஜராஜேஸ்வரி நகர் மண்டல பகுதியில் சில இடங்களை பார்வையிட்டார்.
நடைபயணமாக, கொடிஹள்ளி, ஹேரோஹள்ளி பகுதிகளை பார்வையிட்ட பின், அவர் கூறியதாவது:
கொடிஹள்ளி பகுதியில் நடந்து வரும் சாலை விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட அரசு நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் வந்துள்ளது. சம்மந்தப் பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து ஏழு நாட்களுக்குள் அறிக்கை தர வேண்டும்.
ஹேரோஹள்ளி ஏரியில் அதிக துர்நாற்றம் வீசுகிறது. இந்த ஏரியில் ரசாயன கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதுபோன்று கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது.
ராஜராஜேஸ்வரி நகர் மண்டலத்தில் 139 பூங்காக்கள் உள்ளன. அவற்றில் 49 சதவீத பூங்காக்கள் மட்டுமே பராமரிக்கப்படுகின்றன. அனைத்து பூங்காக்களையும் நல்லமுறையில் பராமரிக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
துர்நாற்றம் வீசாமல், சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சியின் தூய்மைப் பணிகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.