நள்ளிரவில் லஞ்சம் வாங்கிய தலைமை டாக்டர் சிக்கினார்
நள்ளிரவில் லஞ்சம் வாங்கிய தலைமை டாக்டர் சிக்கினார்
ADDED : ஜூலை 05, 2025 08:31 PM
பரிதாபாத்:ஹரியானாவில், 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது, பல்வால் தலைமை மருத்துவ அதிகாரி, டாக்டர் ஜெய்பகவான், கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
ஹரியனா மாநிலம், பல்வால் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெய் பகவான். தனியார் மருத்துவமனையில் ஆய்வு நடத்திய அவர், விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதால் மருத்துவமனையை மூடுவதாக மிரட்டியுள்ளார்.
மேலும், நடவடிக்கை எடுக்காமல் இருக்க, 15 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இரண்டு தவணைகளாக 7 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தனர்.
மீதி தொகையை கேட்டு, ஜெய் பகவான் கடும் நெருக்கடி கொடுத்துள்ளார். இதையடுத்து, குருகிராம் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
கடந்த, 3ம் தேதி இரவு 11:00 மணிக்கு, பல்வாலில் உள்ள ஜெய் பகவான் வசிக்கும் அரசு இல்லத்தில், தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கும் போது, ஊழல் தடுப்புப் பிரிவினர் ஜெய்பகவானை சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
மேலும், அவரது வீட்டில் நடத்திய சோதனையில், கணக்கில் வராத, 3 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மனோகர் மற்றும் பால்வாலைச் சேர்ந்த தீரஜ் மற்றும் சுபாஷ் ஆகியோர் இணைந்து, 'சன் ரைஸ்' மருத்துவமனையை, மூன்று மாதங்களுக்கு முன், பால்வாலில் துவக்கினர். ஆனால், மருத்துவமனையில் உள்ள குறைபாடுகளைக் காரணம் காட்டி, தன் அதிகாரத்தை பயன்படுத்தி மருத்துவமனையை மூடுவதாக ஜெய் பகவான் பலமுறை மிரட்டியுள்ளார்.
மேலும், 15 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு, 7 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். மீதி, 8 லட்சத்தை கேட்டு நெருக்கடி கொடுத்த போதுதான் மனோகர் புகார் செய்தார். ஜெய் பகவான் ஏற்கனவே ஜிந்த் மாவட்டத்தில் பணியில் இருந்த போது சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் பணி நியமன மோசடி, சோனிட்டில் பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்தது ஆகிய வழக்குகள் ஏற்கனவே ஜெய் பகவான் மீது நிலுவையில் உள்ளன.