வரும் 25ல் தமிழகம் வருகிறார் தலைமை தேர்தல் கமிஷனர்
வரும் 25ல் தமிழகம் வருகிறார் தலைமை தேர்தல் கமிஷனர்
ADDED : பிப் 21, 2026 06:31 AM

புதுடில்லி: சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, வரும் 25ல், தமிழகத்துக்கு தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா , மேற்கு வங்கம் மற்றும் அசாமில், வரும் ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், ஜூன் 15ல் சட்டசபையின் பதவிக்காலம் முடி வடைகிறது. மற்ற மாநிலங் களில், மே மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் முடிவடைகிறது.
வடகிழக்கு மாநிலமான அசாமுக்கு, சமீபத்தில் சென்ற தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழுவினர், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அடுத்த கட்டமாக, தமிழகம், புதுச்சேரிக்கு வர திட்டமிட்டு உள்ளனர்.
இரு மாநிலங்களிலும், வரும் 25 - 27 பயணம் மேற்கொள்ளும் குழுவினர், தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளனர். மேலும், அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஏப்ரலில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அசாம், மேற்கு வங்கத்தில் பல கட்டங்களாக நடக்கவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மார்ச் இரண்டாவது வாரத்தில் வெளியாகிறது.

