அயோத்தி ராமர் கோயில் விழாவில் பங்கேற்பு: இமாம் பிரிவு தலைவருக்கு கொலை மிரட்டல்
அயோத்தி ராமர் கோயில் விழாவில் பங்கேற்பு: இமாம் பிரிவு தலைவருக்கு கொலை மிரட்டல்
UPDATED : ஜன 30, 2024 09:42 AM
ADDED : ஜன 30, 2024 08:49 AM

புதுடில்லி: அனைத்திந்திய இமாம் பிரிவு தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. என்னை எதிர்ப்பவர்கள், வெறுப்பவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என இமாம் உமர் அகம்மது இலியாசி கூறியுள்ளார்.
கடந்த 22 ம் தேதி அயோத்தி ராமர் கோயில் ராம பிராண பிரதிஷ்டை கோலாகலமாக நடந்தது. இவ்விழாவில் நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், ஆன்மிக குருக்கள், மடாதிபதிகள், மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பை கவுரவமாக ஏற்று பலரும் கலந்து கொண்டனர். இதில் முஸ்லிம் முக்கிய நிர்வாகிகளும் அடங்குவர். அனைத்திந்திய இமாம் அமைப்பின் தலைவர் டாக்டர் இமாம் உமர் அகம்மது இலியாசியும் பங்கேற்றார்.
அன்பின் அடையாளம்
விழாவில் கலந்து கொண்ட நாள் முதல் பல்வேறு மிரட்டல் போன் கால் வருவதாகவும், சமூக வளைதளங்களில் கடும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளதாக இமாம் கூறியுள்ளார்.
' எனக்கு அதிகம் கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. ராமர் கோயில் பிரதிஷ்டை என்பது தேசத்தில் ஒரு முக்கிய நிகழ்வு. பங்கேற்பது குறித்து நான் 2 நாட்களாக யோசித்து முடிவு எடுத்தேன். அன்பின் அடையாளமாக சென்றேன். நான் எந்தவொரு குற்றச்செயலும் செய்யவில்லை.
பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்
இது இந்த தேசத்திற்காக, மனிதநேயத்திற்கானது. இதற்காக நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை. இந்த தேசத்தை மதிப்பவர்கள், என்மீது அன்பு செலுத்துபவர்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள். இதனை ஏற்று கொள்ள முடியாமல் என்னை வெறுப்பவர்கள் பாகிஸ்தானுக்குத்தான் செல்ல வேண்டும்.
நாம் அனைவரும் இந்தியாவில் வசிக்கிறோம். அனைவரும் இந்தியர்களே. இந்தியாவை வலிமை படுத்த ஒன்று பட்டு இருக்க வேண்டும். தேசமே அனைத்திற்கும் மேலானது. இவ்வாறு இமாம் கூறியுள்ளார்.