ஜனநாயகத்தின் மூன்று துாண்களும் சமமாக மதித்து நடக்கும்படி தலைமை நீதிபதி பேச்சு
ஜனநாயகத்தின் மூன்று துாண்களும் சமமாக மதித்து நடக்கும்படி தலைமை நீதிபதி பேச்சு
ADDED : மே 19, 2025 12:12 AM

மும்பை: தான் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு மஹாராஷ்டிரா தலைமைச் செயலர், டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் வராததை சுட்டிக் காட்டும் வகையில், ''ஜனநாயகத்தின் மூன்று துாண்களும் சமம்; பரஸ்பரம் மதித்து நடக்க வேண்டும்,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் குறிப்பிட்டார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, பி.ஆர்.கவாய் சமீபத்தில் பதவியேற்றார். மஹாராஷ்டிராவைச் சேர்ந்த அவருக்கு, மும்பை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்டவை சார்பில் பாராட்டு விழா, மும்பையில் நேற்று நடந்தது.
சிறப்பு அதிகாரம்
மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க, கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடுவை நிர்ணயித்து, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
அரசியல் சாசனத்தின் 142வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது.
இது தொடர்பாக, 14 கேள்விகளை எழுப்பி, உச்ச நீதிமன்றத்தின் விளக்கத்தை, ஜனாதிபதி திரவுபதி முர்மு கோரியுள்ளார்.
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், இதைக் குறிப்பிடும் வகையில், பி.ஆர்.கவாய் பேசியதாவது:
நம் நாட்டில், நீதித்துறை, பார்லிமென்ட் மற்றும் அரசு நிர்வாகம் ஆகிய, ஜனநாயகத்தின் மூன்று துாண்களும் சமமானவை. ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும்.
நம் நாட்டில், 'புரோட்டோகால்' எனப்படும் நடைமுறை மரபுகள் சில உள்ளன. நாட்டின் உயர் அரசியலமைப்பு பதவியில் உள்ளவர், அதுவும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றவர், தன் சொந்த மாநிலத்துக்கு முதல் முறையாக வந்துள்ளார்.
அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில், மாநிலத்தின் தலைமைச் செயலர், டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் பங்கேற்கவில்லை.
இது மரபை மீறியதாகும். இது சாதாரண விஷயமாக இருந்தாலும், மரபு மீறப்பட்டுள்ளது சரியல்ல.
விமர்சனம்
ஒவ்வொரு அரசியல் சாசன அமைப்புகளும், மற்ற அமைப்புகளை மதிக்க வேண்டும் என்பதற்காகவே இதை குறிப்பிடுகிறேன். இதுவே நாங்கள் செய்திருந்தால், 142வது சட்டப் பிரிவை தவறாகப் பயன்படுத்தியுள்ளோம் என்ற விமர்சனம் முன் வைக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அம்பேத்கரின் நினைவிடமான சைத்ய பூமிக்கு, தலைமை நீதிபதி சென்றார். அப்போது, மாநில தலைமைச் செயலர், டி.ஜி.பி., மற்றும் போலீஸ் கமிஷனர் அதில் பங்கேற்றனர்.
''நான் பிரச்னையை உருவாக்க விரும்பவில்லை. நடந்ததை மட்டுமே குறிப்பிட்டேன்,'' என, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நிருபர்களிடம் தெரிவித்தார்.