'சீட்' வழங்குவதில் முதல்வர், துணை முதல்வர்... பனிப்போர்! அவரவர் ஆதரவாளர்களை வேட்பாளராக்க தீவிரம்
'சீட்' வழங்குவதில் முதல்வர், துணை முதல்வர்... பனிப்போர்! அவரவர் ஆதரவாளர்களை வேட்பாளராக்க தீவிரம்
ADDED : பிப் 24, 2024 04:58 AM

பெங்களூரு : லோக்சபா தேர்தலுக்கு, தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியாமல், காங்கிரஸ் மேலிடம் தத்தளிக்கிறது. இதற்கிடையில் தங்களின் ஆதரவாளர்களை வேட்பாளர்களாக்குவதில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக காங்கிரஸ், லோக்சபா தேர்தலுக்கு தயாராகி வருகிறது. குறைந்தபட்சம் 20 தொகுதிகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளது. தேர்தலுக்கு தயாராக அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்களிடம் பணிகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்களும் தொகுதிகளில் சுற்றி வந்து, தொண்டர்கள், தலைவர்களுடன் கூட்டம் நடத்தி, கட்சியை பலப்படுத்துகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை, இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் இன்னும் வேட்பாளர்களை தேர்வு செய்யவில்லை. பல தொகுதிகளில் காங்கிரசுக்கு வேட்பாளர்களே இல்லை. அமைச்சர்களை களமிறக்க விரும்புகிறது. நாங்கள் போட்டியிட முடியாது. தேசிய அரசியலுக்கு செல்ல விருப்பம் இல்லை என, அவர்கள் பகிரங்கமாகவே கூறியுள்ளனர்.
எனவே யாரை களமிறக்குவது என, காங்கிரஸ் மேலிடம் மண்டையை பிய்த்துக் கொள்கிறது. வேட்பாளர் பட்டியலை தயாரிக்க தாமதமாவதில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் இடையே ஏற்பட்டுள்ள பனிப்போரும் காரணம் என, தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தலில் தங்களின் ஆதரவாளர்களை வேட்பாளர்களாக்க வேண்டும் என, முதல்வரும், துணை முதல்வரும் திரை மறைவில் முயற்சிக்கின்றனர். வெற்றி பெறும் திறன் உள்ளதா, மக்களிடம் செல்வாக்கு உள்ளதா என்பதை பற்றி ஆலோசிக்காமல், தொலைநோக்கு பார்வையுடன் தங்களின் ஆதரவாளர்களை லோக்சபா தேர்தலில் களமிறக்க, முதல்வர், துணை முதல்வர் திட்டமிட்டுள்ளனர்.
சமீபத்தில் வேட்பாளர் தேர்வு குறித்து, ஆலோசனை நடத்த காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, ஹரிஷ் சவுத்ரியுடன், டில்லியில் இருந்து பெங்களூருக்கு வந்திருந்தார். இவர்கள் முதல்வர், துணை முதல்வருடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.
ஆனால் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. ஆறேழு தொகுதிகளில் தாங்கள் சிபாரிசு செய்தவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டும் என, முதல்வர், துணை முதல்வர் ஒற்றைக்காலில் நிற்கின்றனர். எனவே வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியாமல், திரும்ப சென்றனர்.
சிக்கபல்லாபூர் தொகுதியில், முன்னாள் அமைச்சர் சிவராமின் மகன் ரக்ஷா ராமையாவை களமிறக்க, முதல்வர் சித்தராமையா விரும்புகிறார். ஆனால் அதே தொகுதியின் முன்னாள் எம்.பி., வீரப்ப மொய்லியை களமிறக்க வேண்டும் என, துணை முதல்வர் சிவகுமார் பிடிவாதம் பிடிக்கிறார்.
துமகூரு தொகுதியில், முத்தஹனுமே கவுடாவை களமிறக்கும் நோக்கில், அவரை பா.ஜ.,வில் இருந்து, காங்கிரசுக்கு முதல்வர் சித்தராமையா அழைத்து வந்தார். இவருக்கு ஆதரவாக அமைச்சர்கள் பரமேஸ்வர், ராஜண்ணா நிற்கின்றனர். ஆனால் ம.ஜ.த.,வில் இருந்து, காங்கிரசில் இணைந்த கவுரி சங்கரை வேட்பாளராக்க, துணை முதல்வர் சிவகுமார் முயற்சிக்கிறார்.
மைசூரு தொகுதி சீட்டுக்கு, மாநில காங்., செய்தி தொடர்பாளர் லட்சுமண் போட்டி போடுகிறார். இவரை களமிறக்க முதல்வரும் விரும்புகிறார். துணை முதல்வர் சிவகுமார், தன் உறவினர் சுஷ்ருத் கவுடாவுக்கு சீட் பெற முயற்சிக்கிறார். இதற்கிடையில் மைசூரு மாவட்ட காங்., தலைவர் விஜயகுமாரை களமிறக்க, மேலிடம் ஆலோசிக்கிறது.
சாம்ராஜ்நகர் தொகுதியில், அமைச்சர் மகாதேவப்பாவின் மகன் சுனில் போசை வேட்பாளராக்க வேண்டும் என, முதல்வர் ஆர்வம் காண்பிக்கிறார். ஆனால் மகாதேவப்பாவையே களமிறக்க வேண்டும் என, துணை முதல்வர் முயற்சிக்கிறார். இந்த தொகுதியிலும், முதல்வர், துணை முதல்வர் இடையே இழுபறி நிலை உள்ளது.
பல சுற்று ஆலோசனை நடத்தியும், இந்த தொகுதிகளுக்கு வேட்பாளர் தேர்வு செய்வதில், முதல்வர், துணை முதல்வர் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், தனியாக கமிட்டி அமைக்கும் கட்டாயத்திற்கு காங்., மேலிடம் தள்ளப்பட்டுள்ளது. இக்கமிட்டி உத்தேச வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும். இதில் முதல்வர், துணை முதல்வர் சிபாரிசு செய்வோரின் பெயர்களும் இடம் பெறும். தகுதியான வேட்பாளர்களை மேலிடம் முடிவு செய்யும்.
ஆனால் முதல்வர், துணை முதல்வர் இடையே ஏற்பட்ட பனிப்போரால், வேட்பாளர்களை தேர்வு செய்வதே, தலைமைக்கு பெரும்பாடாக உள்ளது.
இவர்களின் மோதல், தொண்டர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். கோஷ்டி பூசலுக்கு வழி வகுக்கும். இதனால் லோக்சபா தேர்தலில் கட்சிக்கு பின்னடைவு ஏற்படலாம் என, காங்., மேலிடம் அஞ்சுகிறது. முதல்வர், துணை முதல்வருக்கு வேண்டியவர்கள் என, கருதாமல் வெற்றி பெறும் திறன் கொண்ட வேட்பாளர்களை, தானே தேர்வு செய்ய மேலிடம் முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.