மகன், மருமகள் பெயரில் 'பப்' திறந்துள்ளார் முதல்வர்: பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் குற்றச்சாட்டு
மகன், மருமகள் பெயரில் 'பப்' திறந்துள்ளார் முதல்வர்: பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் குற்றச்சாட்டு
ADDED : அக் 23, 2024 08:57 PM

மைசூரு: ''முதல்வர் சித்தராமையா, தன் மகன், மருமகள் பெயரில் பப் திறந்துள்ளார். இதன் 'மாஸ்டர் மைண்ட்' அமைச்சர் பைரதி சுரேஷ்,'' என, பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் குற்றஞ்சாட்டினார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
முதல்வர் சித்தராமையா, 'நான் நல்லவன்' என, தண்டோரா அடிக்கிறார். ஆனால் தனது மகன், மருமகள் பெயரில் 350 கோடி ரூபாய் செலவில், பெங்களூரில் பப் திறந்துள்ளார்.
இதற்கு சூத்திரதாரி அமைச்சர் பைரதி சுரேஷ்; அவரது தொகுதியிலேயே அந்த பப் உள்ளது.
சித்தராமையாவின் போக்கு, மக்களுக்கு தெரியும். அமைச்சர் பைரதி சுரேஷை, உள்ளே தள்ளினால் அனைத்து விஷயமும் வெளிச்சத்துக்கு வரும்.
நானும் கூட மூன்று கட்சிகளில் இருந்தவன். ஆனால் என் கொள்கையை விட்டுக் கொடுத்தது இல்லை. சமீப காலமாக, தனி நபருக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசியல் முன்னிலையில் உள்ளது. காங்கிரசை சித்தராமையா நாசப்படுத்துகிறார். அவர் என்ன செய்கிறார் என்பதே புரியவில்லை.
'தான் சத்தியவான்'
வருணா தொகுதியில் நேற்று வளர்ச்சிப் பணிகளுக்கு, சித்தராமையா அடிக்கல் நாட்டும்போது, 'தான் சத்தியவான்' என கூறிக்கொண்டார். அது அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியா அல்லது புகழ்பாடும் நிகழ்ச்சியா?
இவர் கூறுவதை நம்பும் அளவுக்கு, மைசூரு மக்கள் முட்டாள்கள் அல்ல. ஊழல்வாதி என்பது, மக்களுக்கு தெரியும். 'எனக்கு வீடு இல்லை, மரிசாமி வீட்டில் உறங்குகிறேன்' என, முதல்வர் கூறியுள்ளார் என்றால் என்ன அர்த்தம்?
முன்னாள் எம்.எல்.சி., யோகேஸ்வரை, சிப்பாய் என, அழைக்கக் கூடாது. அப்படி அழைப்பது சிப்பாய் குலத்துக்கே அவமானம். பெரிய தலைவர் என, கருதி பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த.,வினர் கட்சிக்கு அழைக்கின்றனர்.
மோசடியாளர்
நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த கட்சியை, சித்தராமையா பாழாக்குவது ஏன்? ஏற்கனவே முடா, வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டில் சிக்கி, சித்தராமையா அரசு பரிதவிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், மோசடியாளரான யோகேஸ்வரை, கட்சியில் சேர்த்துள்ளனர்.
நான் ஹுன்சூர் தொகுதியில், பா.ஜ., சார்பில் போட்டியிட்டபோது, எடியூரப்பா அனுப்பி வைத்த பணம், பொருட்களை சுருட்டிக் கொண்டு ஓடியவர் அவர்.
மூன்று கட்சிகளின் தலைவர்களும், இடைத்தேர்தல் குறித்து மண்டையை குடைந்து கொள்கின்றனர். மக்களின் கஷ்டங்கள், இவர்களின் கண்களுக்கு தெரியவில்லை. அரசை பற்றி மக்கள் அதிருப்தியுடன் பேசுகின்றனர். மக்கள் பிரதிநிதிகள், பெங்களூரை விட்டு நகர்வது இல்லை.
சித்தராமையாவும், பைரதி சுரேஷும், குருபர் சமுதாயத்துக்கு கரும்புள்ளியை ஏற்படுத்துகின்றனர். சிறைக்குச் சென்று வந்த முன்னாள் அமைச்சரை தலைப்பாகை, சால்வை அணிவித்து வரவேற்க, வெட்கமாக இல்லையா?
பல்வேறு மாவட்டங்கள், ஜல பிரளயத்தில் சிக்கியுள்ளன. வெளியே வர முடியாமல், மக்கள் பரிதவிக்கின்றனர். ஆனால் முதல்வரும், துணை முதல்வரும் மழை பாதிப்புகளுக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போன்று நடந்து கொள்கின்றனர். மாவட்ட பொறுப்பு அமைச்சர்களும் கூட, மாவட்டங்களுக்கு செல்வதில்லை.
அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. முதியோருக்கு உதவித்தொகை கொடுக்க பணம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

