7 ஆண்டுகளில் 60,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பணிகள் துவங்கி விட்டதாக முதல்வர் தகவல்
7 ஆண்டுகளில் 60,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பணிகள் துவங்கி விட்டதாக முதல்வர் தகவல்
ADDED : மார் 09, 2024 11:15 PM

பெங்களூரு: ''கர்நாடகாவில் அடுத்த 7 ஆண்டுகளில், 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே துவங்கிவிட்டது,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடக மின்துறை சார்பில், பெங்களூரு எலஹங்காவில் ஜி.கே.வி.கே., மையத்தில், விவசாய சோலார் மின்சார கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. சோலார் மின்சார உபகரணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்த கண்காட்சியை, முதல்வர் சித்தராமையா நேற்று துவக்கிவைத்து பேசியதாவது:
நாட்டிலேயே வறட்சி மாநிலங்களில், கர்நாடகா இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே உலர்நில விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள்தொகை பெருகிக் கொண்டே உள்ளது. விவசாயிகளின் விளைச்சல் குறைந்து வருகிறது.
மாநிலத்தில் தற்போது, 32 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்த 7 ஆண்டுகளில் 60 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே துவங்கிவிட்டது.
சோலார் பம்ப்செட், சோலார் பேனல்களுக்கான மானிய தொகையை 30 சதவீதத்தில் இருந்து, 50 சதவீதமாக மாநில அரசு உயர்த்தி உள்ளது. நமது அரசின் இந்த வசதியை விவசாயிகள் அதிகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
சோலார் மின்சார பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம், மின் பற்றாக்குறையை சமாளிக்க முடியும். விவசாயிகள் சோலார் மின்சாரத்தை பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
'கிரஹ ஜோதி' திட்டத்தின் கீழ், இதுவரை 1.20 கோடி குடும்பங்களின் 5,320 கோடி ரூபாய் மின் கட்டணத்தை மாநில அரசு செலுத்தியுள்ளது. மக்கள் பூஜ்ய பில் பெறுகின்றனர்.
சோலார் மின்துறை புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் விவசாயிகளின் வீட்டு வாசலை சென்றடைய வேண்டும். விவசாய துறையில், மேலும் மேலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அது விவசாயிகளை அடையும் போது தான் நாட்டின் வளர்ச்சி சாத்தியமாகும்.
விவசாயிகள் அதிகளவில் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். இதற்கான அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்யும். சோலார் மின்சார உற்பத்திக்கு, மத்திய அரசு 30 சதவீதம் மட்டுமே மானியம் வழங்குகிறது. மாநில அரசு 50 சதவீதம் மானியம் வழங்குகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், மின் துறை அமைச்சர் ஜார்ஜ், உயர்கல்வித்துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

