பேச்சுக்கு முதல்வர் மம்தா வரணும் 'கேட்டதை செய்ங்க!' நேரலையில் ஒளிபரப்பு செய்யணும்
பேச்சுக்கு முதல்வர் மம்தா வரணும் 'கேட்டதை செய்ங்க!' நேரலையில் ஒளிபரப்பு செய்யணும்
UPDATED : செப் 12, 2024 05:47 AM
ADDED : செப் 12, 2024 12:47 AM

கோல்கட்டா : பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜூனியர் டாக்டர்களை பேச்சு நடத்த வரும்படி மேற்கு வங்க அரசு அழைப்பு விடுத்தது. பேச்சில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்க வேண்டும், 30 பேர் வருவோம், பேச்சை நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என, டாக்டர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதை அரசு ஏற்கவில்லை.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த மாதம், 9ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
இது நாடு முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பயிற்சி பெண் டாக்டர் மரணத்துக்கு நீதி கேட்டும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கேட்டும், ஜூனியர் டாக்டர்கள், தொடர்ந்து 33வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம், படுகொலை சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும்; பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலையிலும், சம்பவ இடத்தில் ஆதாரங்களை அழித்தவர்களையும் பொறுப்பாக்கி, தண்டிக்க வேண்டும்; ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோல்கட்டா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல், சுகாதாரத் துறைச் செயலர் நாராயண் ஸ்வரூப் நிகம் உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும்; டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் ஆகியவை இவர்களுடைய கோரிக்கைகளாகும்.
இதைத் தவிர, மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள மிரட்டும் கலாசாரத்தை நீக்க வேண்டும் என்பதையும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த உச்ச நீதிமன்றம், போராட்டத்தைக் கைவிட்டு, நேற்று முன்தினம் மாலைக்குள் பணிக்கு திரும்பும்படி கூறியிருந்தது. ஆனால், அதை நிராகரித்து ஜூனியர் டாக்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாநில சுகாதாரத் துறைச் செயலர் நாராயண் ஸ்வரூப் நிகம், பேச்சுக்கு வரும்படி, டாக்டர்களுக்கு நேற்று முன்தினம் அழைப்பு விடுத்தனர்.
ஆனால், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளதால், அந்த அழைப்பை டாக்டர்கள் நிராகரித்தனர்.
இந்நிலையில், பேச்சுக்கு தயாராக இருப்பதாக, மாநில அரசுக்கு டாக்டர்கள் தரப்பில் இருந்து நேற்று 'இ - மெயில்' அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தலைமைச் செயலர் மனோஜ் பந்த் அனுப்பிய பதிலில், மாலை 6:00 மணிக்குள் பேச்சுக்கு வரலாம் என்றும், 12 முதல் 15 பேர் வரை வரலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.
மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று பணிக்கு திரும்பாதது தொடர்பாகவும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கடிதத்தைத் தொடர்ந்து, டாக்டர்கள் தரப்பில் சில கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. பேச்சில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்க வேண்டும்.
பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், 30 பேர் வரை பேச்சில் பங்கேற்க வருவோம். வெளிப்படைத்தன்மை இருக்கும் வகையில், இந்த பேச்சை நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மேலும், பேச்சின்போதே தங்களுடைய முடிவை அறிவிக்க முடியாது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவருடமும் கலந்து பேசியே, முடிவை அறிவிக்க முடியும். தங்களுடைய இந்த நிபந்தனைகளை ஏற்றால், பேச்சில் பங்கேற்க தயாராக இருப்பதாக ஜூனியர் டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த கோரிக்கைகளை ஏற்க மேற்கு வங்க அரசு மறுத்துள்ளது.
இதுகுறித்து மாநில அமைச்சர் சந்திரிமா பட்டாசாரியா கூறியதாவது:
இது முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்துடன் இருப்பதாக தெரிகிறது. அதிகாலை 3:50 மணிக்கு பேச்சுக்கு தயாராக இருப்பதாக இ - மெயில் அனுப்பியுள்ளனர்.
தகவல் அனுப்பும் நேரமா இது? சில அரசியல் கட்சிகளின் துாண்டுதலால் இந்தப் போராட்டத்தை இவர்கள் தொடர்வதாக கருதுகிறோம்.
அரசியலை ஒதுக்கி, மக்களின் நலனுக்காக போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்ப வேண்டும். டாக்டர்கள் பாதுகாப்புக்காக ஏற்கனவே சட்டசபையில் மசோதா நிறைவேற்றியுள்ளோம். அவர்களுடைய கோரிக்கைகளை கேட்பதற்கும் தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.