கட்டுமான தொழிலாளர்கள் நலன் புறக்கணிப்பு ஆம் ஆத்மி மீது முதல்வர் ரேகா குற்றச்சாட்டு
கட்டுமான தொழிலாளர்கள் நலன் புறக்கணிப்பு ஆம் ஆத்மி மீது முதல்வர் ரேகா குற்றச்சாட்டு
ADDED : ஆக 08, 2025 10:43 PM
புதுடில்லி:“கட்டுமானத் தொழிலாளர்களின் நலனை, முந்தைய ஆம் ஆத்மி அரசு புறக்கணித்து விட்டது,”என, முதல்வர் ரேகா குப்தா பேசினார்.
டில்லி சட்டசபையில், மழைக்காலக் கூட்டத் தொடர், 4ம் தேதி துவங்கியது. நான்காம் நாளான நேற்று நடந்த கூட்டத்தில், முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:
கட்டுமானத் தொழிலாளர்களின் நலனை, ஆம் ஆத்மி அரசு புறக்கணித்து விட்டது. இதுகுறித்து, சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய தலைமைக் கணக்கு அதிகாரி அறிக்கைப்படி விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்க பொதுக்கணக்குக் குழுவுக்கு பரிந்துரைக்க வேண்டும்.
நீதிமன்ற உத்தரவுகள் இருந்த போதிலும், கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்கவில்லை. மேலும், தொழிலாளர்களுக்கு கருவிகள் வாங்க கடன், வீட்டுக் கடன் மற்றும் கருச்சிதைவு ஏற்பட்டால் கர்ப்பிணியருக்கு நிதியுதவி வழங்குவது உட்பட பல்வேறு திட்டங்களை ஆம் ஆத்மி அரசு செயல்படுத்தவில்லை.
கடந்த, 2019ம் ஆண்டு முதல் முதல் 2023ம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டு காலத்துகான சி.ஏ.ஜி., அறிக்கையில், கட்டுமானத் தொழிலாளர் நலத் திட்டங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளது. மேலும், டில்லி அரசிடம் 3,500 கோடி ரூபாய் நிதி இருந்த நிலையிலும், கட்டுமானத் தொழிலாளர் நலத் திட்டங்களை செயல்படுத்தவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., வீரேந்திர கதியன், “சி.ஏ.ஜி., அறிக்கையில் ஆம் ஆத்மி அரசை விமர்சித்த பத்திகளை மட்டுமே பா.ஜ.,வினர் சபையில் பேசுகின்றனர். கொரோனா தொற்று பரவல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்ற நான்கு ஆண்டு காலத்தை பற்றித்தான் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
''தொற்று பரவல் காலத்தில் தொழிலாளர்களுக்கு தலா, 5,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது,”என்றார்.
பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் பூனம் சர்மா மற்றும் நீலம் பஹல்வான் ஆகியோர், “கட்டுமானத் தொழிலாளர்களின் தேவைகளை ஆம் ஆத்மி அரசு பூர்த்தி செய்யாததால் தான், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் டில்லியை விட்டு வெளியேறினர்,” என்றனர்.
சட்டசபை சபாநாயகர் விஜேந்தர் குப்தா, கடந்த 4ம் தேதி முதல்வர் ரேகா குப்தா சமர்ப்பித்த கட்டுமானத் தொழிலாளர்கள் குறித்த சி.ஏ.ஜி., அறிக்கை மற்றும் 2023 - 20-24ம் ஆண்டுக்கான டில்லி அரசின் நிதிக் கணக்குகள் மற்றும் ஒதுக்கீட்டுக் கணக்குகள் குறித்த சி.ஏ.ஜி., அறிக்கைக ஆகியவற்றை பொதுக்கணக்கு குழு விசாரணைக்கு அனுப்ப உத்தரவிட்டார்.

