வெளிமாநில வாகனத்துக்கு தரச்சான்றிதழ் புதிய திட்டத்தை அறிவித்தார் முதல்வர் ரேகா
வெளிமாநில வாகனத்துக்கு தரச்சான்றிதழ் புதிய திட்டத்தை அறிவித்தார் முதல்வர் ரேகா
ADDED : ஏப் 02, 2025 11:06 PM
புதுடில்லி:“தலைநகர் டில்லியில் காற்று மாசுபாட்டை கட்டுக்குள் கொண்டுவர, மற்ற மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கு மாசு தரச்சான்றித வழங்குவதற்கான புதிய திட்டம் அமல்படுத்தப்படும்,” என, முதல்வர் ரேகா குப்தா சட்டசபையில் அறிவித்தார்.
டில்லி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி நாளான நேற்று, முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:
நாட்டின் தலைநகரான டில்லியில் காற்று மாசுபாட்டை கட்டுக்குள் கொண்டுவர, மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்படும். மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும். அடுத்த் ஆண்டு இறுதிக்குள் டில்லி மாநகர் முழுதும் 48,000 சார்ஜிங் மையங்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 18,000 மையங்களை அரசே அமைக்கும். மீதி 30,000 மையங்களுக்கு தனியாருக்கு வழங்கப்படும்.
காற்றின் தரத்தைக் கண்காணிக்க மேலும் ஆறு இடங்களில் அதிநவீன காற்று தர கண்காணிப்பு மையங்கள் கட்டப்படும்.
மின்னணு கழிவுகளை முறையற்ற வகையில் அகற்றுவதால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, புதிய சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும். மாசுபாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்த, கடுமையான திட்டங்களை அமல்படுத்துவது மட்டுமின்றி, மாநகரின் உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்படும்.
டில்லியில் காற்று மாசு பெரும் சவாலாக இருக்கிறது. மாநகர மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க வைக்க வேண்டியது அரசின் கடமை.
வெளிமாநிலங்களில் இருந்து டில்லிக்குள் வரும் வாகனங்களுக்கு மாசு தரச்சான்றிதழ் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

