ADDED : மார் 29, 2025 07:17 PM

புவனேஸ்வர்:“தலைநகர் டில்லியில், 'உத்கல் திவாஸ்' எனப்படும் ஒடிசா தினம் ஏப்.,1ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்படும்,”என, டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறினார்.
கடந்த 1936ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி, பீஹார் மாநிலத்தில் இருந்து ஒடிசா மாநிலம் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்.,1ம் தேதி, உத்கல் திவாஸ் எனப்படும் ஒடிசா தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகருக்கு இரண்டு நாள் பயணமாக டில்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று முன் தினம் வந்தார். பூரி ஜெகன்னாதர் கோவிலில் நேற்று, சுவாமி தரிசனம் செய்தார். அவருடன், பூரி தொகுதி பா.ஜ., - எம்.பி., சம்பித் பத்ரா, ஒடிசா சட்ட அமைச்சர் பிரிதிவிராஜ் ஹரிசந்திரன், டில்லி பொதுப்பணித் துறை அமைச்சர் பர்வேஷ் சிங் வர்மா ஆகியோர் வந்திருந்தனர்.
சுவாமி தரிசனத்துக்குப் பின், ரேகா குப்தா கூறியதாவது:
ஒடியா மக்களுக்கும், தலைநகர் டில்லியில் வசிக்கும் ஒடியா மக்களுக்கும் உத்கல் திவாஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு முதல், தலைநகர் டில்லியிலும் அனைத்து மாநிலங்களின் தினங்கள் டில்லி அரசு சார்பில் கொண்டாடப்படும். அந்த வகையில், ஒடிசா தினம் நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்படும்.
டில்லியில் வசிக்கும் ஒடியா மக்கள் டில்லி மாநகர வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்கின்றனர். டில்லி அரசு அவர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.
டில்லி முதல்வராக பதவியேற்றபின், முதன் முறையாக பூரி கோவிலில் ஜெகநாதரை தரிசனம் செய்யும் வாய்ப்பு அமாவாசை நாளில் கிடைத்தது. பிரதமர் மோடி தலைமையில் டில்லியும் நாடும் வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்ட வேண்டும். இந்தப் பாதை எப்போதும் தெளிவாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜியை, ரேகா குப்தா நேற்று சந்தித்துப் பேசினார்.
முன்னதாக, மறைந்த பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போது மத்திய அமைச்சராக பதவி வகிக்கும் தர்மேந்திர பிரதானின் தந்தையுமான தேபேந்திர பிரதான் 12வது நாள் சடங்கில், நேற்று முன் தினம் பங்கேற்ற ரேகா குப்தா, அவரது படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார்.