கன்வார் முகாமுக்கு 1,200 யூனிட் மின்சாரம் இலவசம் முதல்வர் ரேகா குப்தா அறிவிப்பு
கன்வார் முகாமுக்கு 1,200 யூனிட் மின்சாரம் இலவசம் முதல்வர் ரேகா குப்தா அறிவிப்பு
ADDED : ஜூன் 24, 2025 07:47 PM

புதுடில்லி:“கன்வார் முகாம்களுக்கு, 1,200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்,”என, முதல்வர் ரேகா குப்தா கூறினார்.
டில்லி, ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பீஹார், ஜார்க்கண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் மாநில சிவபக்தர்கள், ஆண்டு தோறும் பாதயாத்திரையாக சென்று கவுமுக், ஹரித்வார் மற்றும் கங்கோத்ரி ஆகிய புனித தலங்களில் இருந்து கங்கை நீர் எடுத்து வந்து, தங்கள் ஊர் சிவன் கோவிலில் அபிஷேகம் செய்வர். இது, கன்வர் யாத்திரை என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கன்வர் யாத்திரை வரும், 11ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடக்கிறது. உ.பி., மாநிலம் மீரட்டில் கன்வர் யாத்திரைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கிறது.
இந்நிலையில், முதல்வர் ரேகா குப்தா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்குப் பின், நிருபர்களிடம் ரேகா கூறியதாவது:
கன்வார் யாத்ரீகர்களுக்கான அனைத்து வசதிகளையும் அரசு செய்து தரும். எந்த டெண்டர் செயல்முறையும் இல்லாமல், நேரடியாக நிதி உதவி அளிக்கப்படும். இதனால், ஊழல் தடுக்கப்படும்.
அமைச்சர் கபில் மிஸ்ரா தலைமையில், நான்கு எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட குழு, நிதி உதவியின் உச்ச வரம்பு குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்கும். கன்வார் யாத்ரீகர்களுக்கான முகாம்களுக்கு, 1,200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். அரசிடம் பதிவு செய்யப்படாத கன்வாரி குழுவினர், ஜூலை 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். கன்வாரிகள் தங்கும் முகாம்களில், உதவிக்காக சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.