மாநகராட்சி மண்டல எல்லைக்கு இணையாக மாவட்ட எல்லை மாற்றம் முதல்வர் ரேகா குப்தா தகவல்
மாநகராட்சி மண்டல எல்லைக்கு இணையாக மாவட்ட எல்லை மாற்றம் முதல்வர் ரேகா குப்தா தகவல்
ADDED : ஆக 31, 2025 01:58 AM

புதுடில்லி:“தேசிய தலைநகர் பிராந்தியத்தின், 11 மாவட்டங்களின் எல்லைகள், டில்லி மாநகராட்சி மண்டலங்களுக்கு இணையாக மாற்றப்படும்,”என, முதல்வர் ரேகா குப்தா கூறியுள்ளார்.
வடக்கு டில்லி மாவட்ட மேம்பாட்டுக் குழு தலைவர் அலுவலகத்தை முதல்வர் ரேகா குப்தா நேற்று திறந்து வைத்தார்.
அப்போது, நிருபர்களிடம் ரேகா கூறியதாவது:
டில்லியில் பா.ஜ., அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, மாவட்ட கலெக்டர் அலுவலகங்களை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேவையான ஊழியர்கள் மற்றும் நிதி வழங்குவதில் அதிக கவனம் செலுத்துகிறோம்.
கூடுதல் அதிகாரம் டில்லி அரசு, மாநில அளவில் உச்சக் குழு மற்றும் 11 மாவட்ட மேம்பாட்டுக் குழுக்களைக் கொண்ட இரண்டு அடுக்கு அமைப்பாக செயல்படுகிறது.
மாவட்ட அளவில் நிர்வாகத்தை மேம்படுத்த, தேசிய தலைநகர் பிராந்தியத்தின், 11 மாவட்டங்களிலும் செயலகம் அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்தச் செயலகங்கள் அமைந்தால், மக்கள் எந்தத் தயக்கமும் இன்றி தங்கள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
நிர்வாக அளவில் முடிவெடுப்பதில் பரவலாக்கத்தை ஏற்படுத்தவும், பொறுப்பான நிர்வாகத்தை வழங்கவும் மாவட்ட மேம்பாட்டுக் குழுக்கள் செயல்படுகின்றன.
இந்தக் குழுக்களில் அந்தந்த பகுதியின் எம்.எல்.ஏ., கவுன்சிலர் உள்ளிட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள், மாவட்ட கலெக்டர் மற்றும் பல்வேறு துறைகளின் மாவட்ட அளவிலான அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நடவடிக்கையால் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளுக்கு கூடுதலான அதிகாரம் கிடைக்கும். அதேபோல, மாவட்ட எல்லை தொடர்பான பிரச்னைகளை தீர்க்க, மாநகராட்சி மண்ட லங்களுக்கு இணையாக மாவட்ட எல்லைகளும் மாற்றி அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆரோக்ய மந்திர் தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் ரேகா குப்தா நேற்று முன் தினம் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்துக்குப் பின், நிருபர்களிடம் ரேகா கூறியதாவது:
அவசர காலங்களில் மக்களுக்கு பயன் தரும் வகையில், மிகப்பெரிய அளவில், 'ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர்' நிறுவ முடிவு செய்யப் பட்டுள்ளது.
ஒரு ஆரோக்ய மந்திர் கட்ட, 100 சதுர யார்டு அளவு நிலம் போதுமானது என்றாலும், அவசரகால படுக்கைகள் மற்றும் வாகன நிறுத்துமிட வசதிகளுக்காக பெரிய அளவில் கட்டுவதற்கு, இடத்தை அடையாளம் காண அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பழைய ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
மேலும், புதிய கட்டடங்களும் கட்டப்படுகின்றன. டில்லி மாநகர் முழுதும் மாதத்துக்கு, 100 ஆரோக்ய மந்திர்கள் திறக்க திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்துக்கு மத்திய அரசு 2,400 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
எனவே, திட்டத்தை செயல்படுத்துவதில் நிதிச்சிக்கல் எதுவும் ஏற்படாது. டில்லியில் தற்போது, 67 ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர்கள் செயல்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

