எலுமிச்சை சோடா விரும்பிக் குடிப்பேன் கல்லூரி காலத்தை நினைவுகூர்ந்த முதல்வர் ரேகா
எலுமிச்சை சோடா விரும்பிக் குடிப்பேன் கல்லூரி காலத்தை நினைவுகூர்ந்த முதல்வர் ரேகா
ADDED : ஏப் 04, 2025 10:20 PM
புதுடில்லி,:“நாடு முழுதும் கல்விச் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,”என, முதல்வர் ரேகா குப்தா பேசினார்.
டில்லி முதல்வராக கடந்த பிப்ரவரியில் பதவியேற்றுள்ள ரேகா குப்தாவுக்கு, டில்லி பல்கலையில் பாராட்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில், ரேகா பேசியதாவது:
கடந்த 1993ம் ஆண்டு தவுலத் ராம் கல்லூரியில் சேர்ந்தேன். அப்போது, ஏ.பி.வி.பி., எனப்படும் பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டது. இறுதி ஆண்டில் டில்லி பல்கலை மாணவர் சங்கத் தலைவராக தேர்வு பெற்று பணியாற்றியுள்ளேன். அப்போது உச்சகட்ட மகிழ்ச்சியை அடைந்தேன். மாணவர் சங்கத் தலைவராக இருந்த காலத்தில், அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஸ்கூட்டியில் சென்று வருவேன். ஒரு காலத்தில் நான் மாணவியாக பயணித்த சாலைகளை நிர்வகிக்கும் பொறுப்புக்கு வருவேன் என நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.
தவுலத் ராம் கல்லூரி முன், சாலையோர கடைகளில் 'பேல்பூரி' சாப்பிட்டு விட்டு எலுமிச்சை சோடா விரும்பிக் குடிப்பேன். பல போராட்டங்களில் போலீஸ் காவலில் இருந்துள்ளேன்.
நான் ஒரு காலத்தில் எதிர்ப்பு தெரிவித்து பேசிய துணைவேந்தர் அலுவலகத்தில், இன்று மேடையில் இருந்து உரையாற்றுகிறேன். இதைக்கூட கனவிலும் எதிர்பார்க்கவில்லை. டில்லி பல்கலை வளர்ச்சிக்கு, பா.ஜ., அரசு மிகவும் உறுதுணையாக இருக்கும். என் பொறுப்புகளை மிகுந்த அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவேன். டில்லியில் தற்போதுள்ள சுற்றுலா திட்டங்களுடன் கல்விச் சுற்றுலாவையும் மேம்படுத்த அரசு அனைத்து நடவடிக்கையும் எடுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
துணைவேந்தர் யோகேஷ் சிங், “டில்லி பல்கலையின் முன்னாள் மாணவி, டில்லி முதல்வராக தேர்வு பெற்றிருப்பது இந்தப் பல்கலைக்கே பெருமை. முதல்வர் ரேகாவின் இந்தப் பயணம் மாணவியருக்கு ஒரு உத்வேகமாக இருக்கும்,”என்றார்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தான் படித்த தவுலத் ராம் கல்லூரிக்குச் சென்ற முதல்வர் ரேகா, தான் படித்த வகுப்பறைகள் மற்றும் வளாகத்தைச் சுற்றிப் பார்த்தார். பின், நிருபர்களிடம் பேசிய அவர், “கே.ஜி., முதல் பி.ஜி., வரை கல்வி கற்பதில் எந்தப் பிரச்னையும் இல்லாத வகையில் நம் கல்வி முறையை மேம்படுத்த வேண்டும். வெளிநாட்டு மாணவர்கள் நம் நாட்டுக்கு வந்து தரமான கல்வியைப் பெறும் வகையில் டில்லி மற்றும் இதர மாநிலங்களில் கல்விச் சுற்றுலா மேம்படுத்தப்பட வேண்டும்,”என்றார்.

