ஒப்பிட முடியாத வீரத்துக்கு அஞ்சலி கார்கில் வெற்றி நாளில் முதல்வர் ரேகா பேச்சு
ஒப்பிட முடியாத வீரத்துக்கு அஞ்சலி கார்கில் வெற்றி நாளில் முதல்வர் ரேகா பேச்சு
ADDED : ஜூலை 26, 2025 10:21 PM

புதுடில்லி:“கார்கில் போரில் அடைந்த வெற்றி, நம் நாட்டின் தைரியம், நிதானம் மற்றும் கண்ணியத்தை நிரூபித்தது. நம் ராணுவ வீரர்களின் ஒப்பிடமுடியாத வீரம், ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்புக்கு அஞ்சலி செலுத்தினேன்” என, முதல்வர் ரேகா குப்தா கூறினார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானுடன், 1999ம் ஆண்டு நடந்த போரில், டோலோலிங் மற்றும் டைகர் ஹில் போன்ற மிக உயரமான மலைப்பகுதியான கார்கில் பனிச் சிகரத்தில் நம் வீரர்கள் முகாமிட்டு தீவிரமாக போர் புரிந்தனர். நம் நாடு வெற்றி பெற்றதாக ஜூலை 26ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றி, ஆண்டு தோறும் 'கார்கில் விஜய் திவாஸ்' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
கார்கில் போர் வெற்றி தினமான நேற்று, புதுடில்லி ஷாலிமர் பாகில் முதல்வர் ரேகா குப்தா, கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த நம் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது, நிருபர்களிடம் ரேகா குப்தா கூறியதாவது:
கார்கில் போர் என்பது ஒரு பிரதேசத்தைப் பாதுகாப்பது மட்டுமல்ல; நம் நாட்டின் மரியாதை, இறையாண்மை மற்றும் உறுதியை பாதுகாப்பதற்கான போர்.
கார்கிலில் நமக்கு கிடைத்த வெற்றி, நம் நாட்டின் தைரியம்,நிதானம் மற்றும் கண்ணியத்தை நிரூபித்தது. இந்த வெற்றி தாய்நாட்டின் மீது நம் ராணுவ வீரர்கள் வைத்திருந்த பக்திக்கு கிடைத்த வெற்றி.
இந்தப் புனித நாளில், துணிச்சல் மிகுந்த தியாக வீரர்களுக்கு நன்றியுணர்வு மற்றும் மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினேன். நம் ராணுவ வீரர்களின் ஒப்பிட முடியாத வீரம், ஒழுக்கம் மற்றும் அர்பணிப்புக்கு அஞ்சலி செலுத்தினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.