அரசியலில் ஓய்வு பெறுவேன் முதல்வர் சித்தராமையா சவால்
அரசியலில் ஓய்வு பெறுவேன் முதல்வர் சித்தராமையா சவால்
ADDED : பிப் 10, 2024 06:05 AM

தாவணகெரே: ''வரி பங்கிடும் விஷயத்தில், நான் பொய் செல்லவில்லை. கூறியது பொய் என, நிரூபித்தால் நான் அரசியல் ஓய்வு பெறுகிறேன்,'' என முதல்வர் சித்தராமையா சவால் விடுத்தார்.
தாவணகெரேவில் நேற்று அவர் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் எடியூரப்பா தலையாட்டினால், நாங்களும் தலையாட்ட வேண்டுமா. பா.ஜ.,வினரை போன்று, நாங்களும் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமா.
கர்நாடகா 100 ரூபாய் வரி வசூலித்து கொடுத்தால், 12 முதல் 13 ரூபாய் மட்டுமே திரும்ப வருகிறது. இதில், கன்னடர்களுக்கு சம்மதமா?
வரியில் பங்கு அளிப்பதில், பாரபட்சம் பார்க்கும் மத்திய அரசை கண்டித்து, டில்லியில் போராட்டம் நடத்தினோம்.
மாநிலத்தில் இருந்து ஆண்டு தோறும், 4.30 லட்சம் கோடி ரூபாய், வரி வசூலாகிறது.
இதில் நமக்கு கிடைப்பது மிகவும் சொற்பம். மிச்சத்தை மத்திய அரசே வைத்துக் கொள்கிறது.
வரி செலுத்தும் மாநிலங்களின் பட்டியலில், கர்நாடகா இரண்டாவது இடத்தில் உள்ளது. நமது பணத்தை கேட்பது தவறா. அநியாயத்தை எதிர்த்து போராட கூடாதா.
வரி பங்கிடும் விஷயத்தில், நான் பொய் செல்லவில்லை. கூறியது பொய் என, நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விடுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.