நிதி நிலைமை நன்றாக உள்ளது முதல்வர் சித்தராமையா பெருமிதம்
நிதி நிலைமை நன்றாக உள்ளது முதல்வர் சித்தராமையா பெருமிதம்
ADDED : பிப் 17, 2024 05:04 AM

பெங்களூரு : ''மத்திய அரசிடம் இருந்து மாநிலத்துக்கு உரிய பங்கு வரவில்லை. ஆனாலும், பொருளாதார ரீதியாக, மாநிலம் நல்ல நிலையில் உள்ளது,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்த பின், நேற்று முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி:
கடந்த 2017 - 18 முதல் இன்று வரை 1.87 லட்சம் கோடி ரூபாயில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆறு ஆண்டுகளில் 62,000 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்காமல் அநீதி செய்துள்ளது.
மத்திய அரசிடம் இருந்து மாநிலத்துக்கு உரிய பங்கு வரவில்லை. ஆனாலும், பொருளாதார ரீதியாக, மாநிலம் நல்ல நிலையில் உள்ளது. வாக்குறுதிக்காக நடப்பாண்டு 52,009 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. தேவைப்பட்டால் மேலும் வழங்கப்படும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாநில அரசின் நிதி பற்றாக்குறை 2.9 சதவீதமாகும். இது 82,981 கோடி ரூபாயாக உள்ளது. கர்நாடக நிதி பொறுப்பு சட்டம் 2002ல் குறிப்பிட்டுள்ள மூன்று சதவீத வரம்புக்குள் உள்ளது. இதன் மூலம் நிதி ஒழுங்கு கடைபிடிக்கப்பட்டு உள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து 49 சதவீதம் வரி சென்றால், மத்திய அரசு 3 லட்சத்து 12 ஆயிரத்து 280 கோடி ரூபாய் வழங்குகிறது. கர்நாடகாவில் இருந்த 77 சதவீதம் வரி சென்றால், மத்திய அரசு, கர்நாடகத்துக்கு 59 ஆயிரத்து 785 கோடி ரூாபய் மட்டுமே தருகிறது. அதாவது 23 சதவீதம் மட்டுமே வருகிறது.
உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அதிக மானியம் வழங்குவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் தங்க முட்டையிடும் கோழியை கொல்வது போன்று, கர்நாடகாவுக்கு மத்திய அரசு அநீதி இழைக்கக் கூடாது.
அனைத்து ஜாதி, மதங்களுக்கு ஏற்றவாறு சமூக நீதி அடிப்படையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தொலைநோக்கு பார்வையுடன் பட்ஜெட் அமைந்து உள்ளது. மாநிலத்தின் அனைத்து துறை வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கூறினார்.