ADDED : நவ 12, 2024 06:14 AM

ஹாவேரி: ''மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்காக கர்நாடகாவில் இருந்து 700 கோடி ரூபாய் பணம் அனுப்பப்பட்டதை, பிரதமர் நிரூபித்தால், அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன்,'' என, முதல்வர் சித்தராமையா சவால் விடுத்துள்ளார்.
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலை முன்னிட்டு அகோலா என்ற இடத்தில் பிரசாரம் செய்த, பிரதமர் நரேந்திர மோடி, 'கர்நாடகாவில் மிரட்டி பணம் பறிப்பது இரட்டிப்பாகி உள்ளது. அங்கு ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ், மதுக்கடைகளில் இருந்து 700 கோடி ரூபாய் பறித்து, மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் செலவு செய்ய அனுப்பி வைத்துள்ளது' என்றார்.
இதுகுறித்து, நேற்று முதல்வர் சித்தராமையா ஹாவேரியில் அளித்த பேட்டி:
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்காக கர்நாடகாவில் இருந்து 700 கோடி ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டதை, பிரதமர் மோடி நிரூபித்தால், அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். ஒருவேளை நிரூபிக்காவிட்டால் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா?
பிரதமர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போது, அது உண்மைக்கு நெருக்கமானதாக இருக்க வேண்டும். ஆனால் அவர் சொல்லும் குற்றச்சாட்டுகள் எல்லாம் வெகு தொலைவில் உள்ளன. இந்த நாட்டின் பிரதமர், இவ்வளவு பொய் சொல்வதை பார்த்து வியப்படைகிறேன்.
இவ்வாறு அவர்கூறினார்.