பள்ளி, அங்கன்வாடி மையங்களில் சிறுதானிய உணவு சர்வதேச கண்காட்சியில் முதல்வர் சித்து அறிவிப்பு
பள்ளி, அங்கன்வாடி மையங்களில் சிறுதானிய உணவு சர்வதேச கண்காட்சியில் முதல்வர் சித்து அறிவிப்பு
ADDED : ஜன 06, 2024 07:07 AM

பெங்களூரு: “மக்களும், பள்ளி மாணவர்களும் சத்தாண உணவு சாப்பிட வேண்டும். அவர்கள் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எனவே ரேஷன் கடைகள், இந்திரா உணவகங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளில் சிறுதானிய உணவு வழங்கப்படும்,” என, முதல்வர் சித்தராமையா நேற்று அறிவித்தார்.
பண்டை காலத்தில் இருந்து, சிறுதானியங்களை பயன்படுத்தி வருகின்றோம். கால மாற்றத்தினால், மற்ற வகை உணவுக்கு மாறினோம். தற்போது உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை ஏற்பட்டு, மீண்டும் சிறுதானிய உணவு மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், சிறுதானியங்களின் மகத்துவம் குறித்து, விவசாயிகளுக்கும், மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவற்றை சந்தைப்படுத்தும் வகையில், கர்நாடகா விவசாய துறை சார்பில், 2017, 2018, 2019, 2023லும் சர்வதேச சிறுதானிய மற்றும் இயற்கை விவசாய கண்காட்சி நடத்தப்பட்டது.
* 5வது கண்காட்சி
ஐந்தாவது சர்வதேச கண்காட்சி, பெங்களூரு அரண்மனை மைதானத்தில் ஆரம்பித்துள்ளது. இதை முதல்வர் சித்தராமையா, மத்திய விவசாய துறை இணை அமைச்சர் ஷோபா ஆகியோர், முறத்தில் சிறுதானியங்களை கொட்டி நேற்று துவக்கி வைத்தனர். நாளை வரை இந்த கண்காட்சி நடக்கிறது.
விழாவில், முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
மக்களும், பள்ளி மாணவர்களும் சத்தாண உணவு சாப்பிட வேண்டும். அவர்கள் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எனவே ரேஷன் கடைகள், இந்திரா உணவகங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளில் சிறுதானிய உணவு வழங்கப்படும்.
இது குறித்து, விரைவில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அறிவுறுத்தப்படும். மேலும், சிறுதானிய விதைகளை உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு உற்பத்தி செய்யும் வகையில், மத்திய அரசு உதவியுடன், தனி பிரிவு ஆரம்பிக்கப்படும்.
* இயற்கை விவசாயம்
மழை குறைவாக இருக்கும் பகுதியிலும், எத்தகைய நிலத்திலும் சிறுதானியங்கள் பயிரிட முடியும். வறட்சி ஏற்பட்டுள்ள இந்தாண்டில், லாபகரமான சிறுதானியங்களை பயிரிடலாம்.
நார் சத்து, விட்டமின்கள், கனிம சத்து என பல பயன்கள் உள்ளதால், சிறுதானியங்கள் பயன்படுத்தினால், ஆரோக்கியத்துக்கு நல்லது. இதையறிந்து, 2004ல் இயற்கை விவசாய கொள்கை அறிமுகம் செய்யப்பட்டு, 2014ல் திருத்தம் செய்யப்பட்டது.
இந்திரா ஆட்சிக் காலத்தில், பசுமை புரட்சி கொண்டு வரபட்டு, அனைவருக்கும் உணவு கிடைக்கும் வகையில் செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
* 10 வகை உணவு
தமிழகம், உத்தர பிரதேசம், பஞ்சாப், ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, ஒடிசா, மேகாலயா, உத்தர பிரதேசம் உட்பட 16 மாநிலங்களை சேர்ந்த, 300 ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன.
உற்பத்தியாளர்கள், சந்தைப்படுத்துவோரின் கருத்தரங்கு நடக்கிறது. சர்வதேச அளவில் பெயர்பெற்ற 35க்கும் அதிகமான பேராசிரியர்கள் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
சிறுதானியங்களால் செய்யப்பட்ட, பத்து வகையான தின்பண்டங்களை ஹோட்டல்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. விழாவில் பங்கேற்ற அனைத்து விவசாயிகளுக்கும் இலவச சிறுதானிய உணவு வழங்கப்பட்டது.
சிறுதானியங்கள் பயன்படுத்தி, தின்பண்டங்கள் தயாரித்து அதிக லாபம் சம்பாதித்தவர்களுக்கு முதல்வர் விருது வழங்கி கவுரவித்தார்.
விழாவில், கர்நாடகா விவசாய துறை அமைச்சர் செலுவராயசாமி, உத்தர பிரதேச விவசாய துறை அமைச்சர் சூரிய பிரதாப் சாஹி, அமைச்சர்கள் தினேஷ் குண்டுராவ், வெங்கடேஷ், விவசாய துறை செயலர் அன்புகுமார் உட்பட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
படம்: 6_Kirubakaran
முதல் முறையாக பெங்களூரு சர்வதேச சிறுதானிய கண்காட்சியில் ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள், எங்கள் உற்பத்தி பொருட்கள் குறித்து விசாரித்து சென்றனர்.
- கிருபாகரன், செயல் அதிகாரி, தமிழக கிராமப்புற பரிமாற்ற திட்டம்