மேகதாது திட்டத்திற்கு விரைவில் அனுமதி ஜல்சக்தி அமைச்சரிடம் முதல்வர் வலியுறுத்தல்
மேகதாது திட்டத்திற்கு விரைவில் அனுமதி ஜல்சக்தி அமைச்சரிடம் முதல்வர் வலியுறுத்தல்
ADDED : ஏப் 04, 2025 06:57 AM

மத்திய ஜல்சக்தி அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை, கர்நாடக முதல்வர் சித்தராமையா டில்லியில் நேற்று சந்தித்து பேசினார். கர்நாடகாவில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நீர்பாசன திட்டங்கள் பற்றி விவரித்தார். பின், நீர்பாசன திட்டங்கள் தொடர்பாக கோரிக்கை மனுவையும் வழங்கினார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
காவிரி ஆற்றின் 67 டி.எம்.சி., தண்ணீரை சேமித்து வைக்கும் வகையில், மேகதாது பகுதியில் அணை கட்ட திட்டமிடப்பட்டது. இதில் 4.75 டி.எம்.சி., தண்ணீரை பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தவும், 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமும் உள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி மேகதாது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பித்து உள்ளோம். அறிக்கை சமர்பிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.
மேகதாது திட்டம் கர்நாடகா, தமிழகம் மாநிலத்திற்கு மிகவும் முக்கியமானது. காவிரி நீர் தமிழகத்தில் கடலில் சென்று வீணாவதை தடுக்க உதவும்.
மேகதாதில் அணை கட்டினால் தண்ணீரை சேகரித்து வைத்து, தேவையான நேரத்தில் தமிழகத்திற்கு திறந்து விட முடியும். இந்த திட்டம் எந்த வகையிலும் காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை மீறும் வகையில் இருக்காது.
தமிழகத்திற்கு எந்த இழப்பும் ஏற்படாது. தேசிய குடிநீர் கொள்கை, உயர்தர குடிநீர் வழங்குவது தான். இந்த திட்டம் நிறைவேறினால் பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை நிறைவேற்ற முடியும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. - நமது நிருபர் -

