அரசியல் சாசனத்தில் முழு ஈடுபாடு அதிகாரிகளுக்கு முதல்வர் எச்சரிக்கை
அரசியல் சாசனத்தில் முழு ஈடுபாடு அதிகாரிகளுக்கு முதல்வர் எச்சரிக்கை
ADDED : பிப் 01, 2024 06:57 AM

பெங்களூரு: ''எங்கள் அரசில் அதிகாரிகள் மதச்சார்பின்மை மற்றும் அரசியல் சாசனத்தில் முழு ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும். இல்லையெனில், அப்படிப்பட்டவர்கள் இங்கு தொடர விடமாட்டோம்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று, மாவட்ட அளவில் அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கள நிலை முன்னேற்றத்தை கண்காணிக்கும் வகையில், உருவாக்கப்பட்டு உள்ள, 'பிரகதி' மொபைல் செயலி மென்பொருளை முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார்.
பின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில், அவர் பேசியதாவது:
உங்கள் அனுபவங்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு உதவ வேண்டும். அரசின் திட்டங்கள், மக்களிடம் சென்றடைய வேண்டும். அதற்காக மாவட்ட அளவிலான அலுவலர்கள் விரைந்து முடிவெடுக்க உதவ வேண்டும் என்பதால், நீங்கள் நியமிக்கப்பட்டு உள்ளீர்கள். காங்., ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்கள் ஆகின்றன.
மாவட்ட கலெக்டர், முதன்மை செயல் அதிகாரி கூட்டம் நடத்தி, பல அறிவுரைகள் வழங்கி, 3 - 4 மாதங்கள் ஆகிறது. ஆனாலும், சில இடங்களில் அரசின் வாக்குறுதி திட்டங்கள் தொழில்நுட்ப பிரச்னை தீராததால், பயனாளிகளுக்கு சென்றடையவில்லை.
தொழில்நுட்ப பிரச்னையை முதலில் தீர்த்து, தகுதியில்லாத பயனாளிகளிடம் தெரிவித்து, அவர்களின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும். எங்கள் அரசில் அதிகாரிகள் மதச்சார்பின்மை மற்றும் அரசியல் சாசனத்தில் முழு ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும். இல்லையெனில், அப்படிப்பட்டவர்கள் இங்கு தொடர விடமாட்டோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், 'வருவாய் துறை, தாசில்தார், மாவட்ட அலுவலகங்களுக்கு பொது மக்கள் அலைவது குறைந்து உள்ளதா; மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டதா; மக்களின் விண்ணப்பங்கள் எத்தனை நாட்கள் நிலுவையில் உள்ளன என்பதை சரி பார்த்தீர்களா...?
'நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை தீர்த்து வைத்தீர்களா; எத்தனை மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு செய்தீர்கள்; டயாலிசிஸ் மையங்களில் மக்களுக்கு போதுமான சேவை கிடைக்கிறதா' என்றும் அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகளை முதல்வர் எழுப்பினார்.