யமுனையில் கழிவுநீர் தேர்தல் ஆணையத்தில் முதல்வர்கள் முறையீடு
யமுனையில் கழிவுநீர் தேர்தல் ஆணையத்தில் முதல்வர்கள் முறையீடு
ADDED : ஜன 28, 2025 08:04 PM
புதுடில்லி:டில்லி முதல்வர் ஆதிஷி மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர், தேர்தல் ஆணையத்தில் நேற்று, ஹரியானா பா.ஜ., அரசு திட்டமிட்டே யமுனை ஆற்றில் தொழிற்சாலை கழிவுநீரை கலப்பதால், டில்லியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது என புகார் தெரிவித்தனர்.
சந்திப்புக்குப் பின், நிருபர்களிடம் ஆதிஷி கூறியதாவது:
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களைச் சந்தித்தோம். யமுனை நதி நீரில் அமோனியா அளவு 7 பி.பி.எம்., ஆக உயர்ந்துள்ளதை சுட்டுக் காட்டினோன். இதனால் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முடங்கிக் கிடக்கின்றன. டில்லி சட்டசபைத் தேர்தலில் குறுக்கு வழிகளில் வெற்றி பெற பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
அதற்காகவே, யமுனை நதி நீரில் தொழிற்சாலை கழிவு நீரை ஹரியானா அரசு கலக்கிறது. இந்த விவரங்களை ஆதாரத்துடன் அதிகாரிகளிடம் கூறியுள்ளோம். தேர்தல் ஆணையத்தை சுதந்திரமான மற்றும் நியாயமான அமைப்பு என இதுவரை நம்புகிறோம். இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருக்கிறோம். அதேபோல, முனாக் கால்வாயில் கூடுதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிடக் கோரியும் வேண்டுகோள் விடுத்துள்ளோம். கடந்த ஆண்டு அமோனியா அளவையும் இந்த ஆண்டு அளவையும் தேர்தல் ஆணையம் மதிப்பாய்வு செய்யும். அதன்பின், நடவடிக்கை எடுப்பர் என நினைக்கிறோம்.
அண்டை மாநிலமான ஹரியானாவில் இருந்து டில்லிக்குள் நுழையும் இடத்தில் யமுனை நதி நீரில் அமோனியா அளவு இயல்பை விட ஆறு மடங்கு அதிகமாக இருக்கிறது. நச்சுத் தன்மை கொண்ட இந்த நீரைப் பயன்படுத்தினால் உடல்நலக் கேடு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்
இந்த விவகாரத்தில், தேர்தல் ஆணையத்துக்கு நேற்று முன் தினம் ஆதிஷி சிங் கடிதம் அனுப்பி இருந்தார். இந்நிலையில், நேற்று காலை அனுப்பிய கடிதத்தில், ஆணைய அதிகாரிகளை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார். அதற்கு ஒப்புக் கொண்ட ஆணையம் நேற்று மாலை 4:00 மணிக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை சந்திக்க அனுமதி வழங்கியது.
ஏற்கனவே, ஆம் ஆத்மியில் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்குமாறு ஹரியானா அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.