கவர்னர் மீது முதல்வர் தொடர்ந்த வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு!: சித்தராமையா தரப்பு மூத்த வக்கீல் வாதம் நிறைவு
கவர்னர் மீது முதல்வர் தொடர்ந்த வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு!: சித்தராமையா தரப்பு மூத்த வக்கீல் வாதம் நிறைவு
ADDED : ஆக 29, 2024 10:59 PM
பெங்களூரு: 'மூடா' முறைகேடு புகாரில், தன் மீது விசாரணை நடத்த கவர்னர் அளித்த அனுமதிக்கு தடை கோரி, முதல்வர் சித்தராமையா தொடர்ந்த வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது. முதல்வர் தரப்பு மூத்த வக்கீலின் வாதம் நேற்று நிறைவு பெற்றது. நாளை கவர்னர் தரப்பு வக்கீல்கள் வாதம் நடக்கும்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, 'மூடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம், முதல்வரின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டு மனைகள் ஒதுக்கியது.
இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், சித்தராமையா தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும், சமூக ஆர்வலர் ஆபிரகாம், மைசூரில் உள்ள லோக் ஆயுக்தா போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் மீது விசாரணை நடத்த அனுமதி அளிக்கும்படி, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடமும், அவர் கோரினார்.
'ரிட்' மனு
சமூக ஆர்வலர்கள் ஸ்நேகமயி கிருஷ்ணா, பிரதீப் குமார் ஆகியோரும், 'மூடா' முறைகேடு குறித்து தனித்தனியாக ஆவணங்கள் சமர்ப்பித்து, கவர்னரிடம் அனுமதி கோரினர்.
இதை பரிசீலித்த கவர்னர், முதல்வர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவு 17 'ஏ'வின் கீழ் விசாரணை நடத்த, இம்மாதம் 17ம் தேதி அனுமதி அளித்தார்.
இந்த அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இம்மாதம் 19ம் தேதி, முதல்வர் தரப்பில், 'ரிட்' மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை, அவசர வழக்காக கருதி, நீதிபதி நாகபிரசன்னா அதே நாளில் விசாரித்தார்.
அப்போது, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், முதல்வர் மீது ஸ்நேகமயி கிருஷ்ணா தொடர்ந்த வழக்கு மீதான விசாரணையை, அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை ஒத்திவைக்கும்படி இடைக்கால உத்தரவு பிறப்பித்து, வழக்கை நேற்றைக்கு ஒத்திவைத்தார்.
இதன்படி, நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில், நேற்று மதியம் 2:30 மணிக்கு, முதல்வரின் ரிட் மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. முதல்வர் தரப்பில் ஆஜரான உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதாடியதாவது:
கவர்னரிடம் புகார் அளித்த ஆபிரகாம், லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவு, '17 ஏ'யின் கீழ் விசாரணை நடத்த கவர்னரின் அனுமதி தேவையில்லை என்று கூறியுள்ளார். ஸ்நேகமயி கிருஷ்ணா, பிரதீப்குமார் ஆகியோர் கவர்னரிடம் புகார் அளித்ததால், அவர்களுக்கும் கவர்னர் அனுமதி அளித்துள்ளார்.
ஆனால், ஆபிரகாம் புகார் மீது மட்டுமே கவர்னர் விளக்கம் கேட்டு முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்பினார். மற்ற இருவர் புகார் மீதும் விளக்கம் அளிக்கும்படி முதல்வருக்கு, கவர்னர் நோட்டீஸ் அளிக்கவில்லை. எங்கள் கவனத்திற்கு அந்த விஷயம் கொண்டு வரப்படவில்லை.
சாலையில் செல்பவர்கள் யாராக இருந்தாலும், அனுமதி வழங்கும்படி கோரினால், அவர்களுக்கு அனுமதி அளிக்க கவர்னர் உற்சாகத்துடன் உள்ளார். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர் முதல்வர். இவரை பதவியில் இருந்து இறக்குவதற்கு, மக்களுக்கு மட்டுமே உரிமை இருக்க வேண்டும்.
குமாரசாமி
சட்டசபை தேர்தலின் போது, எதிர்க்கட்சியினர் அதிக அளவில் பணத்தை செலவழித்துள்ளனர். ஆனாலும், ஒரு கட்சியை மக்கள் பெரும்பான்மையுடன் தேர்வு செய்து ஆட்சியில் அமர வைத்துள்ளனர்.
மைசூரில் லோக் ஆயுக்தா போலீசில் ஆபிரகாம் புகார் அளிப்பதற்கு முன்னதாகவே, விசாரணைக்கு அனுமதி கோரி, கவர்னரிடம் அவர் சென்றுள்ளார். இந்த விஷயத்தில், நீதி கொள்கைகளை கவர்னர் கடைப்பிடிக்கவில்லை.
மேலும், மத்திய அமைச்சர் குமாரசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜனார்த்தனரெட்டி, சசிகலா ஜொல்லே, முருகேஷ் நிரானி ஆகியோர் மீதான வழக்குகளில் விசாரணை நடத்த அனுமதி கோரிய கோப்புகள், கவர்னரிடம் நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ளன.
இந்த கோப்புகள் மீது கவர்னர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், முதல்வர் சித்தராமையா மீது மட்டும் அவசரமாக நடவடிக்கை எடுத்துள்ளார். முதல்வர் விஷயத்தில், எதற்காக விசாரணைக்கு அனுமதி கொடுத்தார் என்ற தகவலே கவர்னர் உத்தரவில் குறிப்பிடவில்லை. எனவே, முதல்வர் மீது விசாரணைக்கு கவர்னர் அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் வாதாடினார்.
முதல்வர் தரப்பு வக்கீல் வாதம் நேற்று நிறைவு பெற்றது. இதே வேளையில், 'கேவியட்' மனு தாக்கல் செய்திருந்த பிரதீப் குமார் மற்றும் கவர்னர் தரப்பில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா சார்பில் ஆஜரான வக்கீல் ஆகியோர் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. மாறாக அடுத்த விசாரணையின் போது, எழுத்துபூர்வமாக வாதங்கள் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, இவ்வழக்கு விசாரணையை, நாளை காலை 10:30 மணிக்கு நீதிபதி நாகபிரசன்னா ஒத்திவைத்தார். மேலும், ஏற்கனவே 19ம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு நீட்டிக்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.