ADDED : அக் 09, 2024 08:16 PM

புதுடில்லி:சமீபத்தில் குடியேறிய சிவில் லைன்ஸ் இல்லத்தில் இருந்து முதல்வர் ஆதிஷிக்கு சொந்தமான பொருட்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர் முகாம் அலுவலகமும் காலி செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் துணைநிலை கவர்னரும் பா.ஜ.,வும் இருப்பதாகவும் ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது.
கலால் கொள்கை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, சிறை சென்றார் முதல்வரும் ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால். உச்ச நீதிமன்றம் அளித்த நிபந்தனை ஜாமினால் வெளியே வந்தார். முதல்வர் அலுவலகம் செல்வதற்கு கூட வாய்ப்பு இல்லாததால், முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
அதைத் தொடர்ந்து மாநில அமைச்சராக இருந்த ஆதிஷி, மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றார். அவரது அமைச்சரவையில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.
இதனால் முதல்வராக இருந்தபோது குடும்பத்தினருடன் வசித்து வந்த பிளாக்ஸ்டாப் சாலை இல்லத்தை அவர் காலி செய்ய நேரிட்டது. லுடியன்ஸ் மண்டலத்தில் உள்ள தன் கட்சி ராஜ்யசபா எம்.பி.,க்கு ஒதுக்கப்பட்ட இல்லத்தில் தன் குடும்பத்தினருடன் அரவிந்த் கெஜ்ரிவால் குடியேறினார்.
இந்நிலையில், மதுரா சாலையில் ஏ.பி., 17 என்ற பங்களா வசித்து வந்த வீட்டில் முதல்வர் ஆதிஷி, பிளாக்ஸ்டாப் சாலையில் கெஜ்ரிவால் வசித்த இல்லத்துக்கு திடீரென குடியேறினார். இங்கிருந்தபடி, அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தையும் நடத்தினார்.
இந்த விவகாரம் குறித்து மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா தன் 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்ட பதிவு:
அரவிந்த் கெஜ்ரிவால் காலி செய்த பின், அந்த இல்லம் முதல்வர் ஆதிஷிக்கு ஒதுக்கப்படவில்லை. அந்த இல்லத்தின் சாவியை பொதுப்பணித் துறையிடம் அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்படைக்கவில்லை. அதை முதல்வர் ஆதிஷி சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளார். இந்த இல்லத்திற்கு பொதுப்பணித்துறையினர், 'சீல்' வைக்க வேண்டும். முதல்வர் ஆதிஷிக்கு மதுரா சாலையில் ஏ.பி., 17 என்ற பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆக்கிரமிப்பை அதிகாரிகள் பாதுகாக்கின்றனர்.
இவ்வாறு அந்த பதிவில் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் கூறியதாவது:
பிளாக்ஸ்டாப் சாலை பங்களா, முதல்வர் ஆதிஷிக்கு ஒதுக்கப்படவில்லை. இதன் பின்னணியில் பா.ஜ., உள்ளது. அதன் அழுத்தத்தால் முதல்வருக்கு இந்த இல்லத்தை அதிகாரிகள் ஒதுக்கவில்லை.
முறைப்படி இந்த இல்லத்தை அரவிந்த் கெஜ்ரிவால் காலி செய்தார். பங்களா வளாகத்தில் இருந்த முதல்வர் முகாம் அலுவலகம் காலி செய்யப்பட்டுள்ளது.
பொதுத்துறை ஆவணங்களின்படி, பிளாக்ஸ்டாப் இல்லத்தை அரவிந்த் கெஜ்ரிவால், முறைப்படி காலி செய்துள்ளார். இந்த விஷயத்தில் பா.ஜ., வேண்டுமென்றே பொய்களை பரப்புகிறது.
ஆம் ஆத்மியை உடைக்கவும் கட்சியின் மதிப்பை சேதப்படுத்தவும் பா.ஜ., மேற்கொண்ட உத்திகள் தோல்வி அடைந்துவிட்டன. இதனால் பொய்களை பரப்பி மக்கள் மத்தியில் பா.ஜ., குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
கடந்த மூன்று முறை சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட்டு, ஒவ்வொரு முறையும் ஆம் ஆத்மி கட்சியிடம் அவர்கள் இருந்து தோல்வியடைந்தனர். தேர்தலில் அவர்களால் வெற்றி பெற முடியாது என்பதால், முதல்வரின் பங்களாவை அபகரிக்க முயற்சிக்கின்றனர்.
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலையில், பிளாக்ஸ்டாப் சாலை பங்களாவை ஆக்கிரமிக்க பா.ஜ., முயற்சி செய்கிறது.
முதல்வர் இல்லத்தின் உரிமையாளரே ஆதிஷி, பங்களாவின் சாவியை பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கவில்லை என்று பா.ஜ., பொய் சொல்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய அரசியலில் இவ்விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதல்வர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'பா.ஜ., தலைவர் ஒருவருக்கு பிளாக்ஸ்டாப் சாலை இல்லத்தை ஒதுக்க துணைநிலை கவர்னர் விரும்புவதால், முதல்வர் இல்லம் வலுக்கட்டாயமாக காலி செய்து வைக்கப்பட்டது. அந்த பங்களாவில் இருந்து முதல்வர் ஆதிஷியின் உடைமைகள் அகற்றப்பட்டன' என கூறப்பட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு துணைநிலை கவர்னர் அலுவலகம், பா.ஜ., தரப்பில் இருந்து உடனடியாக எந்த எதிர்வினையும் இல்லை.
இதற்கிடையில் பிளாக்ஸ்டாப் சாலை பங்களாவுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்றிரவு, 'சீல்' வைத்தனர். இதனால் டில்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.