வாக்குறுதி திட்டங்களால் அரசுக்கு சுமை முதல்வரின் நிதி ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி கருத்து
வாக்குறுதி திட்டங்களால் அரசுக்கு சுமை முதல்வரின் நிதி ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி கருத்து
ADDED : ஜன 08, 2024 10:57 PM
கொப்பால்: “மாநிலத்தில் வாக்குறுதித் திட்டங்கள் செயல்படுத்தியதால், அரசுக்கு பொருளாதார சுமை ஏற்படுகிறது.
எனவே சுமை ஏற்படாத வகையில், திட்டங்களை மேம்படுத்த வேண்டும்,” என, முதல்வரின் நிதி ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி தெரிவித்தார்.
கொப்பாலில் நேற்று அவர் கூறியதாவது:
மாநிலத்தில், 'சக்தி, கிரஹ ஜோதி, கிரஹ லட்சுமி' உட்பட, ஐந்து வாக்குறுதித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 58,000 கோடி ரூபாய் செலவிலான திட்டங்களை, முன்னேற்பாடு இன்றி, திடீரென செயல்படுத்தியதால் அரசுக்கு பொருளாதாக சுமை அதிகரித்துள்ளது.
முதல்வர் சித்தராமையாவுக்கு, ஏழைகளின் மீது அதிகமான அக்கறை உள்ளது. இவர்களின் நலனுக்காக திட்டங்களை செயல்படுத்தினார். இதனால் ஏற்படும் பொருளாதார சுமையை சமாளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குறுதித் திட்டங்களை மேம்படுத்த வேண்டும்.
வரிகளை அதிகரித்து, மக்களின் மீது சுமையை ஏற்றி வைப்பது கஷ்டம். இதைத் தவிர்த்து வருவாயை அதிகரிக்க, அரசு நடவடிக்கை எடுக்கும். விதிமீறலான லே-அவுட்களை முறைப்படுத்துவது உட்பட, பல வழிகளில் வருமானத்தை அதிகரிக்க, அரசு ஆலோசிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.