ADDED : பிப் 29, 2024 06:14 AM

'லோக்சபா தேர்தலில் மைசூரு தொகுதியில் மகன் யதீந்திராவை களம் இறக்குங்கள்' என்று, முதல்வர் சித்தராமையாவுக்கு, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
லோக்சபா தேர்தலில், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் தொகுதியாக மைசூரு இருக்க போகிறது. ஏன் என்றால் முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊர் மைசூரு. கடந்த 2014, 2019ல் பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா வெற்றி பெற்று உள்ளார். இம்முறையும் போட்டியிட்டு 'ஹாட்ரிக்' வெற்றி பதிவு செய்ய, தயாராகி வருகிறார்.
ஆனால் எப்படியாவது மைசூருவை, பா.ஜ.,விடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதில், முதல்வர் சித்தராமையா உறுதியாக இருக்கிறார். இதனால் எதிரணிக்கு போட்டி அளிக்கும், பலமான வேட்பாளரை நிறுத்த முடிவு செய்து உள்ளார். இதுவரை, தகுதியான வேட்பாளர் கிடைக்கவில்லை.
முதலில் தன் மகன் யதீந்திராவை களம் இறக்க, சித்தராமையா நினைத்தார். ஆனால் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி பலமாக இருப்பதால், முதல்வர் தயக்கம் காட்டி வருகிறார்.
ஆனாலும் யதீந்திராவை களம் இறக்குங்கள் என்று, சித்தராமையாவுக்கு, மைசூரு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
மைசூரு லோக்சபா தொகுதிக்கு உட்பட்டு மடிகேரி, விராஜ்பேட், பிரியப்பட்டணா, ஹுன்சூர், சாமுண்டீஸ்வரி, கிருஷ்ணராஜா, சாமராஜா, நரசிம்மராஜா என, எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஹுன்சூர், சாமுண்டீஸ்வரி எம்.எல்.ஏ.,க்கள் ம.ஜ.த.,வினர்; கிருஷ்ணராஜா எம்.எல்.ஏ., மட்டும் பா.ஜ., பிரமுகர். மற்ற ஐந்து தொகுதிகளிலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தான்.
எனவே, யதீந்திராவை எளிதில் வெற்றி பெற வைக்கலாம் என்று, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும், மீண்டும் கூறி வருகின்றனர். ஆனாலும் முதல்வர் சித்தராமையாவால், இன்னும் தீர்க்கமான முடிவு எடுக்க முடியவில்லை.
