ADDED : ஜூன் 18, 2025 06:31 PM
நொய்டா:“நொய்டா சர்வதேச விமான நிலையத்தில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வணிக வாய்ப்புகள் கிடைக்கும்,” என, உத்தரப் பிரதேச மாநில தலைமைச் செயலர் மனோஜ் குமார் சிங் கூறினார்.
புதுடில்லி அருகே, உ.பி., மாநிலம் கவுதம் புத்தா நகர் மாவட்டம் ஜெவார் கிராமத்தில், நொய்டா சர்வதேச விமான நிலையம் கட்டப்படுகிறது. விமான நிலைய பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, உ.பி., மாநில தலைமைச் செயலர் மனோஜ்குமார் சிங் ஆய்வு செய்தார்.
யமுனா சர்வதேச விமான நிலைய பிரைவேட் லிமிடெட், டாடா புராஜெக்ட்ஸ் லிமிடெட் மற்றும் நொய்டா சர்வதேச விமான நிலைய லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகள், ஓடு பாதை, முனையக் கட்டிடம், நீர் சுத்திகரிப்பு நிலையம், சரக்கு போக்குவரத்து வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மனோஜ் குமார் சிங்கிடம் விளக்கினர். மீதமுள்ள கட்டுமானப் பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்கவும், கட்டுமான தரத்தில் எந்த சமரசமும் செய்யக்கூட்டது எனவும் அனைத்து நிறுவன அதிகாரிகளுக்கும் தலைமைச் செயலர் உத்தரவிட்டார்.
அதன்பின், நிருபர்களிடம் பேசிய மனோஜ்குமார் சிங், “நொய்டா சர்வதேச விமான நிலையம் உ.பி., மாநிலத்தின் பொருளாதாரத்துக்கு மிகுந்த உத்வேகம் அளிக்கும். இங்கு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வணிக வாய்ப்புகள் கிடைக்கும்,” என்றார்.
கவுதம் புத்தா நகர் மாவட்ட கலெக்டர் மணீஷ் குமார் வர்மா, யமுனா விரைவுச்சாலை மற்றும் தொழில்துறை மேம்பாட்டு ஆணைய தலைமை நிர்வாக அதிகாரி அருண்வீர் சிங், நொய்டா சர்வதேச விமான நிலைய லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டோப் ஷிரீல்மென் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.