சிக்கபல்லாபூர் மாவட்ட காங்.,கில் பிளவு உச்சக்கட்டம்
சிக்கபல்லாபூர் மாவட்ட காங்.,கில் பிளவு உச்சக்கட்டம்
ADDED : மார் 04, 2024 07:10 AM
கார்ப்பரேஷன், வாரியங்களின் நியமனத்துக்கு பின், சிக்கபல்லாபூர் மாவட்ட காங்கிரசில் பிளவு ஏற்பட்டுள்ளது. இது லோக்சபா தேர்தலில், சீட் எதிர்பார்க்கும் தலைவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ், வேட்பாளர் பட்டியல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த வேளையில் சிக்கபல்லாபூர் மாவட்ட காங்கிரசில், உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது.
இதுவரை பூசல் இருந்தும், வெளிச்சத்துக்கு வரவில்லை. ஆனால் கார்ப்பரேஷன், வாரியங்கள் நியமனத்துக்கு பின், தலைவர்களுக்கு இடையிலான மோதல், வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சிக்கபல்லாபூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேசவ ரெட்டியை, சிக்கபல்லாபூர் நகர வளர்ச்சி ஆணைய தலைவராக நியமித்ததால், பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். 'தாங்கள் சிபாரிசு செய்தவரை விட்டு விட்டு, வேறொருவருக்கு பதவி கொடுத்தது சரியல்ல' என, தலைவர்கள் கோபத்தில் குமுறுகின்றனர்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், ஆளுங்கட்சி காங்கிரசின் ஒவ்வொரு அசைவையும், எதிர்க்கட்சிகள் கவனிக்கின்றன. அதிருப்தியில் உள்ள தலைவர்களை ஈர்க்க முயற்சிக்கின்றன.
தற்போது சிக்கபல்லாபூர் மாவட்ட காங்கிரசில் ஏற்பட்டுள்ள பிளவு, பா.ஜ.,வுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. முன்னாள் அமைச்சர் சுதாகரின் ஆதரவாளர்கள், காங்., அதிருப்தியாளர்களுடன் தொடர்பில் உள்ளனர். இவர்களை பா.ஜ.,வுக்கு அழைத்து வர முயற்சிக்கின்றனர்.
இவர்களும் காங்கிரசில் தங்களுக்கு மதிப்பில்லை. பா.ஜ.,வில் சேர்த்துக்கொண்டால், சுதாகருக்கு ஆதரவாக பணியாற்றுவதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இது காங்., மேலிடத்துக்கு, தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
தலைவர்களின் கோபம், லோக்சபா தேர்தலில் கட்சி வேட்பாளருக்கு பின்னடைவை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்பட முடியாது. 2019ன் லோக்சபா தேர்தலில், தலைவர்களின் பனிப்போர், காங்., வேட்பாளரின் தோல்விக்கு காரணமானது.
சிக்கபல்லாபூர் காங்., - எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வரின் நடவடிக்கையும், தலைவர்களின் எரிச்சலுக்கு காரணமாக அமைந்துள்ளன.
சமூக வலைதளத்தில், சில தலைவர்கள் கூறியதாவது:
காங்கிரசில் கேள்வி கேட்க யாரும் இல்லையா. சிக்கபல்லாபூர் நகர வளர்ச்சி ஆணைய தலைவராக நியமிக்கப்பட்ட கேசவரெட்டி, தன் உறவினர் ஹனுமந்தரெட்டியை, மூன்றாவது முறையாக கோட்டூர் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவராக நியமித்துள்ளார்.
அவரது அதிகார பேராசைக்கு முடிவே இல்லை. சிவசங்கர ரெட்டியிடம் இருந்து, நாங்கள் பிரிந்ததற்கு கேசவ ரெட்டியே காரணம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
பொது இடத்தில் தயக்கம்
நான் அனைத்து விஷயங்களையும் பகிரங்கப்படுத்த முடியாது. கட்சி தலைவர்கள், பொது இடத்தில் பேச தயங்குவர். நாங்கள் சிபாரிசு செய்தவரை விட்டு விட்டு, கேசவரெட்டியை சிக்கபல்லாபூர் நகர வளர்ச்சி ஆணைய தலைவராக நியமித்துள்ளனர். இது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது.
நந்தி அஞ்சனப்பா
முன்னாள் தலைவர், சிக்கபல்லாபூர்
சாகும் வரை உண்ணாவிரதம்
சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் நடக்கும், அரசியல் நிகழ்வுகளை மாவட்ட பொறுப்பு அமைச்சர், கண்காணிக்க வேண்டும். கட்சிக்கு உழைத்தவர்களை புறக்கணிக்கின்றனர். கட்சி தொண்டர்களை அலட்சியப்படுத்தினால், நாங்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்.
நாராயணசாமி,
பிரசார குழு தலைவர், சிக்கபல்லாப்பூர்
- நமது நிருபர் -

