'டே கேர்' 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பலி
'டே கேர்' 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பலி
ADDED : ஜன 27, 2024 12:18 AM

ஹென்னுார் -'டே கேர்' மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த, 4 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தது.
கேரளாவை சேர்ந்தவர் ஜிட்டோ டாமி ஜோசப். இவரது மனைவி பினிடோ தாமஸ். பெங்களூரில் ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்கின்றனர்.
ஹென்னுாரில் வசிக்கின்றனர். இந்த தம்பதியின் மகள் ஜியானா ஆனோ, 4. கல்யாண் நகர் செல்லிகெரேயில் உள்ள 'டே கேர்' எனும் குழந்தைகளை பராமரிக்கும் மையத்தில் ஜியானாவை அவளது பெற்றோர் விட்டுச் செல்வது வழக்கம்.
கடந்த 22ம் தேதி மையத்தின் மூன்றாவது மாடியில் இருந்து, ஜியானா தவறி விழுந்தாள். தலையில் பலத்த காயம் அடைந்த குழந்தையை டே கேர் நிர்வாகத்தினர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. 24 மணி நேர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல், நேற்று காலை ஜியானா இறந்தாள்.
ஜியானா மாடியில் இருந்து விழுந்து, அரைமணி நேரத்திற்கு மேலாக அவளை யாரும் பார்க்கவில்லை என்பதும், ஜியானா விளையாடும்போது, சுவரில் தலை மோதி, குழந்தை காயம் அடைந்ததாக டே கேர் நிர்வாகம் பொய் கூறியதும், போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. நிர்வாகம் மீது, இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

