தெலங்கானாவில் குழந்தைகள் விற்பனை: 11 பேர் கொண்ட கும்பல் கைது
தெலங்கானாவில் குழந்தைகள் விற்பனை: 11 பேர் கொண்ட கும்பல் கைது
ADDED : மே 28, 2024 07:05 PM

ஐதராபாத்: வடமாநிலங்களில் இருந்து குழந்தைகளை கடத்தி வந்து விற்பனை செய்ததாக 11 பேர் கொண்ட கும்பலை தெலங்கானா போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் ஷோபா ராணி, இவர் மருத்துவத்துறை ஆர்.எம்.பி.,யாக உள்ளார். இவர் ரூ. 45. 5 லட்சத்திற்கு பச்சிளம் குழந்தையை விற்றதாக எழுந்த புகாரில் கடந்த 22-ம் தேதி கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். ஷோபா ராணியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
இது குறித்து மெடப்பள்ளி, ரட்ஷாகொண்டா நகர போலீஸ் கமிஷனர் தருண் ஜோஷி கூறியதாவது, கைது செய்யப்பட்ட ஷோபா ராணியின் பின்னணியில் மிகப்பெரிய குழந்தை விற்பனை கும்பல் இருந்துள்ளது. இவர்கள் வடமாநிலங்களில் வறுமையில் வாடும் குடும்பங்களை கண்டறிந்து அவர்களிடம் பச்சிளம் குழந்தை வாங்கி வந்து ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் டில்லி, மற்றும் பெருநகரங்களிலும் ரூ. 1.8 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையில் விற்பனை செய்துள்ளனர். இதற்காக 11 பேர் கும்பல் செயல்பட்டு குழந்தையை விற்பனையில் ஈடுபட்டுள்ளது.. 11 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு மாதம் முதல் மூன்று மாதம் வரையிலான 13 பச்சிளம் குழந்தைகளை பறிமுதல் செய்துள்ளோம் என்றார்.