UPDATED : பிப் 22, 2024 03:43 AM
ADDED : பிப் 22, 2024 01:08 AM

திருவனந்தபுரம்,: கேரளாவில் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்க கணவர் முயற்சித்த நிலையில், தாய் மற்றும் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தனர். கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் நயாஸ். இவரது மனைவி சமீரா பீவி, 36. ஒன்பது மாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது.
அவரது கணவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், வீட்டிலேயே வைத்து பிரசவம் பார்த்துள்ளார். இதில் சமீரா பீவியின் உடல்நிலை மோசமடைந்தது. அதன் பின், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சமீராவை பரிசோதித்த மருத்துவர்கள் தாயும், குழந்தையும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்து உள்ளனர். கர்ப்பிணி இறந்ததை அறிந்த அப்பகுதி கவுன்சிலர் தீபிகா, இது குறித்து போலீசில் புகார் அளித்தார்.
புகாரில் அவர் கூறியிருப்பதாவது:
கர்ப்பிணியாக இருந்த சமீரா பீவியை, அவரது கணவர் முறையாக மருத்துவமனை அழைத்துச் சென்று பரிசோதனைகள் செய்யவில்லை; அக்குபஞ்சர் செய்யும் நபரை வீட்டிற்கு அழைத்து சிகிச்சை பார்த்துள்ளார்.
இது சமீராவுக்கு நான்காவது குழந்தை. ஏற்கனவே பிறந்த மூன்று குழந்தைகளும் அறுவை சிகிச்சை வாயிலாகவே பிறந்தன. அதனால், அவருக்கு சுகப்பிரசவம் நடப்பதற்கான வாய்ப்பே இல்லை.
இதை, ஆஷா சுகாதார பணியாளர் கூறிய போதும் நவாஸ் கேட்க மறுத்ததுடன், மனைவியை சிகிச்சை பெற அனுமதிக்கவில்லை. எங்களுடன் அவரை பேச விடாமல் தடுத்து வைத்திருந்தார்.
முறையான சிகிச்சை பெற அனுமதியுங்கள் என கேட்டதற்கு, சுகப்பிரசவம் நடக்க யுடியூப் வீடியோக்களை பார்த்து கற்று வைத்திருப்பதாக கூறினார். இந்நிலையில் தான் அவரது மனைவியும், குழந்தையும் இறந்துள்ளனர்.
இவ்வாறு புகாரில் கூறியுள்ளனர்.