ஷிவமொகாவில் மோத தயாராகும் 'மாஜி' முதல்வர்களின் பிள்ளைகள்
ஷிவமொகாவில் மோத தயாராகும் 'மாஜி' முதல்வர்களின் பிள்ளைகள்
ADDED : மார் 07, 2024 04:08 AM

கர்நாடகாவுக்கு இரண்டு முதல்வர்களை வழங்கிய ஷிவமொகாவில் இருந்து, இம்முறை லோக்சபா தேர்தலில் முன்னாள் முதல்வர்களின் பிள்ளைகள் மோதலுக்கு தயாராகி வருகின்றனர். தந்தையின் தோல்விக்கு காரணமான ராகவேந்திராவுக்கு, தோல்வி ருசியை காட்ட பங்காரப்பா குடும்பத்தினர் தயாராகி வருகின்றனர்.
கர்நாடகாவுக்கு பங்காரப்பா, எடியூரப்பா என இரு முதல்வர்களை கொடுத்த மாவட்டம் ஷிவமொகா. இந்த லோக்சபா தொகுதியில் ஷிவமொகா ரூரல், பத்ராவதி, ஷிவமொகா, தீர்த்தஹள்ளி, ஷிகாரிபுரா, சொரபா, சாகர், உடுப்பி மாவட்டத்தின் பைந்துார் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இதில், கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., நான்கிலும்; காங்கிரஸ் மூன்றிலும், ம.ஜ.த., ஒன்றிலும் வெற்றி பெற்றுள்ளன.
19 பொது தேர்தல்
இங்கு 1952 முதல் 2019 இடைத்தேர்தல் உட்பட மொத்தம் 19 பொதுத் தேர்தல்கள் நடந்துள்ளன. இதில், 10 முறை காங்கிரஸ், ஆறு முறை பா.ஜ., சம்யுக்த சோசலிஸ்ட் கட்சி, சமாஜ்வாடி, கே.ஜே.பி., ஆகிய கட்சிகள் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.
ஷிவமொகா லோக்சபா தொகுதி 1952 முதல் 1999 வரை காங்கிரஸ் வசம் இருந்தது. இதில், 1996, 1999ல் காங்கிரசில் பங்காரப்பா போட்டியிட்டார்.
அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் சேர்ந்த பங்காரப்பா, 2004லும்; பா.ஜ.,வில் இருந்து விலகி, 2005ல் சமாஜ்வாதி கட்சியிலும் வெற்றி பெற்றார். பங்காரப்பா எந்த கட்சியில் சேர்ந்தாலும் வெற்றி பெறும் சூழல் இருந்தது.
கடந்த 2009ல் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா முதன் முறையாக வெற்றி பெற்று, பங்காரப்பாவின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
லோக்சபா தேர்தல் - 2014ல் எடியூரப்பா போட்டியிட்டு வென்றார். அவர், 2018 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, சட்டசபை எதிர்க்கட்சி தலைவரானார். இதனால் காலியான லோக்சபா தொகுதிக்கு, 2018ல் நடந்த லோக்சபா இடைத்தேர்தலில் அவரது மகன் ராகவேந்திரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019 பொதுத் தேர்தலிலும் அவரே வெற்றி பெற்றார்.
கடந்த 2019 தேர்தலில் பா.ஜ.,வின் ராகவேந்திராவும், ம.ஜ.த.,வின் மது பங்காரப்பாவும் போட்டியிட்டனர். இதில் ராகவேந்திரா, 2.25 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.
ஜாதி கணக்கீடு
இத்தொகுதியில் மொத்தம் 14.82 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், முக்கியமாக 4 லட்சம் ஈடிகர்களும்; 3 லட்சத்துக்கும் மேற்பட்ட லிங்காயத்களும்; 3 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
கடந்த சட்டசபை தேர்தல், வளர்ச்சி அலை, ஹிந்துத்துவா முடிவை மாற்றியுள்ளது. எனவே, இம்முறை லோக்சபா தேர்தல் புதிய கணக்கை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் அனைவரும் பலமான சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது சிறப்பு விஷயம்.
பழிவாங்க...
ஷிவமொகாவில் பா.ஜ., சார்பில் இம்முறை மீண்டும் ராகவேந்திராவுக்கு சீட் கிடைக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஆனால், காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார் என்பது தான் தற்போதைய கேள்வி.
காங்கிரஸ் சார்பில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பாவின் சகோதரியும், நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியுமான கீதாவின் பெயர் நீண்ட நாட்களாக அடிபட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் ஷிவமொகா வந்த கீதாவும், 'கட்சி மேலிடம் அனுமதித்தால் போட்டியிடுவேன்' என்று கூறியிருந்தார்.
திடீர் திருப்பமாக, பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், பங்காரப்பாவின் மூத்த மகனும், மது பங்காரப்பாவின் சகோதரருமான குமார் பங்காரப்பாவை காங்கிரசில் இணைய வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
ஈடிகா சமுதாயத்தை சேர்ந்த அவரும் கட்சியில் இணைந்தால், இச்சமுதாய ஓட்டுகள் அனைத்தும் காங்கிரசுக்கு வரும் என திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு மது பங்காரப்பாவிடம் அனுமதி கேட்கின்றனர். காரணம், குடும்ப விஷயமாக, பல ஆண்டுகளாக இருவரிடையே மோதல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதே வேளையில் குமார் பங்காரப்பாவை, தாரை வார்க்க பா.ஜ.,வும் தயாரில்லை. அவரை கட்சியில் தக்கவைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறது.

