'மொபைல் போன்'களில் மூழ்கும் குழந்தைகளுக்கு ஆபத்து!
'மொபைல் போன்'களில் மூழ்கும் குழந்தைகளுக்கு ஆபத்து!
UPDATED : ஜூலை 13, 2025 04:03 AM
ADDED : ஜூலை 13, 2025 03:09 AM

புதுடில்லி: நம் நாட்டில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 'மொபைல் போன்'களை நாள்தோறும் 2 மணிநேரம் பார்ப்பது நிபுணர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது, பரிந்துரைக்கப்பட்ட நேரத்தைவிட இரு மடங்கு அதிகம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரின், ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 'மொபைல் போன், டேப்லேட், லேப் டாப்' போன்றவற்றை நாள்தோறும் எத்தனை முறை பயன்படுத்துகின்றனர்? இதற்காக எவ்வளவு மணி நேரம் செலவிடுகின்றனர்? என சமீபத்தில் ஆய்வு செய்தனர்.
நாடு முழுதும், 2,857 குழந்தைகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், ஒவ்வொரு குழந்தையும் நாள்தோறும், 2.22 மணி நேரம் மொபைல் போன் திரைகளை பார்ப்பது தெரியவந்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமி ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்களால், நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பான வரம்பைவிட இது இரு மடங்கு அதிகம்.
அதேபோல், 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மொபைல் போன் பார்க்கும் நேரத்தை பூஜ்ஜியமாக நிபுணர்கள் நிர்ணயித்துள்ள சூழலில், அது தினமும் 1.23 மணி நேரமாக இருப்பது கவலையை அதிகரித்துள்ளது.
இது போல், தொடர்ந்து மொபைல்போன் உள்ளிட்ட சாதனங்களை பார்ப்பதால் குழந்தைகளின் மொழித்திறன், அறிவாற்றல், சமூக நடத்தை போன்றவை பாதிக்கப்படுகிறது.
அதிக உடல் பருமன் ஆபத்து, துாக்கமின்மை, கவனம் செலுத்தவதில் சிரமம் போன்ற தொந்தரவுகள் குழந்தைகளுக்கு ஏற்படுவதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பெரும்பாலான வீடுகளில், குழந்தைகளை உணவு உண்ண செய்வதற்காக மொபைல் போன்களை கொடுத்து பெற்றோர் பழக்கப்படுத்துகின்றனர்.
அதேபோல், தொந்தரவு செய்யாமல் இருக்கவும், இந்த பழக்கம் ஊக்குவிக்கப்படுகிறது. இதனால், நன்மையைவிட, அதிக அளவு தீங்கு விளைவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.