
கால்நடை டாக்டர்
கன்னட சின்னத்திரையில், மிதுனராசி என்ற தொடரில், நடிப்பு திறனை காண்பித்து அதிக ரசிகர்களை பெற்றவர் நடிகை சம்பதா. தெலுங்கு திரையுலகிலும் இருந்தவர். தற்போது குருதத் கானிகா இயக்கும், 'கராவலி' படத்தில் நாயகியாக நடிக்கிறார். இதில் பிரஜ்வல் தேவராஜ் நாயகனாக நடிக்கிறார்.
படத்தில் கால்நடை டாக்டராக தோன்றுகிறார். படத்தில் கம்பாலா விளையாட்டும், முக்கிய இடம் பெற்றுள்ளது. இப்போட்டி நடக்கும் இடத்தில் கால்நடை டாக்டரும் இருப்பார். கதையில் திருப்பு முனையை ஏற்படுத்தும் கதாபாத்திரம். இதற்கு முன் நிகில் குமாரசாமியின் ரைடர் படத்தில், இரண்டு நாயகிகளில் ஒருவராக சம்பதா நடித்திருந்தார்.
காதலுக்கு நிபந்தனை
பொறியியல் கல்லுாரியில் படிக்கும் மாணவன், மருத்துவ கல்லுாரியில் படிக்கும் மாணவி இடையே, அறிமுகம் ஏற்படுகிறது. இது காதலாக மாறுகிறது. மாணவனே முதலில் தன் காதலை வெளிப்படுத்துகிறார். மாணவியும் அதை ஏற்கிறார். ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் விதிக்கிறார்.
அது என்ன என்பதை தெரிந்து கொள்ள, நகுவின ஹூகள மேலே என்ற படத்தை பார்க்க வேண்டும். சின்னத்திரை நடிகர் அபிதாஸ், இந்த படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகி சரண்யா ஷெட்டியும் சிறப்பாகவே நடித்துள்ளார். காதலை விரும்புவோர் படத்தை பார்க்கலாம்.
ரவிக்கையால் மாற்றம்
சந்தோஷ் கொடங்கேரி இயக்கத்தில், சம்பத் மைத்ரேயி, கீதா பாரதிபட் நடிக்கும் ரவிகே பிரசங்கா இன்று, திரைக்கு வருகிறது. இதை முன்னிட்டு, படக்குழுவினர் போட்டி ஏற்பாடு செய்துள்ளனர். சிறப்பாக ரவிக்கை தைக்கும் டெய்லர் கவுரவிக்கப்படுவார். போட்டியில் வெற்றி பெற்றவருக்கு தையல் மிஷின், மொபைல் போன், சினிமா டிக்கெட் பரிசளிக்கப்படும்.
பொதுவாக சேலை என்றால் பெண்களுக்கு விருப்பம். சேலைக்கு பொருத்தமாக ரவிக்கை தைத்துக்கொள்வர். இதே போன்று ஒரு ரவிக்கையால், நாயகியின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை, திரையில் பார்க்க வேண்டுமாம்.
உண்மை சம்பவம்
விவான் மற்றும் அனுஷா ராய் இணைந்து நடிக்கும், தைர்யம் சர்வத்ர சாதனம் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. நடிகர் துருவா சர்ஜா, டிரெய்லரை வெளியிட்டு, படக்குழுவினரை வாழ்த்தினார். இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதையாகும். யாருடைய கதை, எங்கு நடக்கிறது என்பதை, அந்த நபரின் போட்டோ மற்றும் முழுமையான விபரங்களை கிளைமாக்சில் காண்பித்துள்ளனர்.
புதிய இசை அமைப்பாளர்
நடிகர் பிருத்வி ஆம்பர் நடித்த, மத்ஸ்யகந்தா திரைப்படம், வரும் 23ல் திரைக்கு வருகிறது. உத்தரகன்னட சம்பிரதாயம், அங்குள்ள மக்களின் வாழ்க்கையை கூறும் பாடல் வெளியானது.
கன்னடத்தில் பல படங்களில், சாக்லேட் ஹீரோவாக வந்த பிருத்வி ஆம்பர், இந்த படத்தில் காக்கி சீருடை அணிந்து மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். நடிகர் பிரஷாந்த் சித்தி, இப்படத்தின் மூலம், இசை அமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார்.