ADDED : மார் 02, 2024 10:29 PM

இயக்குனராக பதவி உயர்வு
சிவில் பொறியாளர் புனித் நாகராஜ், உதவி இயக்குனராக, பல படங்களில் பணியாற்றினார். தற்போது ஹைட் அண்ட் சீக் படத்தின் மூலம் சோலோ இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
படம் பற்றி அவரிடம் கேட்ட போது, ''படத்தில் அனுாப் ரேவண்ணா, தன்யா ராம்குமார் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். சமீபத்தில் டிரெய்லர் வெளியிட்டோம். முன்னாள் அமைச்சரும், அனுாப்பின் தந்தையுமான ரேவண்ணா, அமைச்சர் ராமலிங்கரெட்டி உட்பட, பலர் நிகழ்ச்சியில் பங்கேற்று படக்குழுவினரை வாழ்த்தினர். வரும் 15ல் படம் திரைக்கு வரும். கடத்தல் குற்றத்தை சுற்றிலும் நடக்கும் கற்பனை கதையாகும்,'' என்றார்.
நகைச்சுவை உணர்வு
புனித் ராஜ்குமாருடன், ஜேம்ஸ் படத்தில் நடித்திருந்த பிரியா ஆனந்த், அதன்பின் கன்னடத்தில் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின், கரடகா தமனகா படத்தில் பிரியா ஆனந்த் நடிக்கிறார்.
இது தொடர்பாக, அவர் கூறுகையில், ''புதிய நடிகர்கள், இயக்குனர்களுடன் பணியாற்றுவது புதிய அனுபவத்தை அளிக்கும். கரடகா, தமனகா படத்துக்காக என்னை தொடர்பு கொண்ட போது, இயக்குனர் யோகராஜ்பட்டை சந்திக்க பயந்தேன். ஆனால் அவர் நகைச்சுவை உணர்வு கொண்ட, அமைதியான இயக்குனர்களில் ஒருவர் என்பது, எனக்கு புரிந்தது. குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க கூடிய, சிறப்பான படமாகும். இதுவரை நான் நடித்த படங்களிலேயே, இது மிகவும் மாறுபட்டது,'' என்றார்.
ஆக்ஷன், காமெடி
நகைச்சுவை நடிகர் சிக்கண்ணா முதன் முறையாக நாயகனாக நடித்த, உபாத்யக்ஷா படத்தில் அறிமுகமானவர் நடிகை மலைகா வசுபால். சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமான இவர், வித்யாபதி என்ற படத்தில் நாயகியாகும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
படக்குழுவினர் கூறுகையில், ''இந்த படத்தில் மலைகா, வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாகபூஷன் 'கராத்தே கிங்' கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். இது ஆக்ஷன், காமெடி கதை கொண்டதாகும்,'' என்றனர்.
காணாமல் போகும் இளம்பெண்
தயாரிப்பாளரும், இயக்குனருமான ஹரிஷ்ராஜ், பல ஆண்டுகளுக்கு பின், ஹாரர் கதையுடன் திரையுலகுக்கு திரும்பி உள்ளார்.
இது குறித்து, அவர் கூறுகையில், ''சஸ்பென்ஸ், ஹாரர் கதை கொண்ட பிரேதா என்ற படத்தை தயாரிக்கிறேன். ஊரில் ஒரு ஆத்மா நடமாடுகிறது. அது யார்; இளம் பெண் ஒருவர் காணாமல் போகிறார், அவர் என்ன ஆனார் என்ற பல கேள்விகளுக்கு, கிளைமாக்சில் விடை தெரியும். திகில் படங்களை பார்த்து நீண்ட நாள் ஆகிவிட்டது என, நினைப்பவர்கள் பார்க்க வேண்டிய படம் இது. பின்னணி இசை, திரைக்கதை, படப்பிடிப்பு நடந்த இடங்கள், படத்துக்கு முதுகெலும்பாக நிற்கின்றன. படத்தில் பல திருப்பங்கள் உள்ளன,'' என்றார்.
கேரளாவில் படப்பிடிப்பு
நடிகர் சரண் நாயகனாக நடிக்கும், அவதார புருஷா - 2 படம், வரும் 22ல் திரைக்கு வருகிறது.
இது தொடர்பாக, படக்குழுவினரிடம் கேட்ட போது, ''கொரோனா நேரத்தில், அவதார புருஷா திரைக்கு வந்தது. நன்றாக ஓடவில்லை. அதன்பின் அமேசான் பிரைம் வீடியோவில் திரையிடப்பட்டது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை திரைக்கு கொண்டு வருகிறோம். முதல் பாகத்தில் சரண் ஜூனியர் ஆர்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இரண்டாம் பாகத்திலும் மாறுபட்ட கதாபாத்திரம். மடிகேரி, பெங்களூரின் ஹெசரகட்டா, கேரளா பாலக்காடின் ஒளப்பமன்னாவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இது காமெடி கலந்த ஹாரர் படமாகும்,'' என்றார்.
புதுமுக காதல் ஜோடி
'தில்குஷ்' என்ற இனிப்பு குறித்து, பலருக்கும் தெரியும். தற்போது, இதே பெயரில் திரைப்படம் தயாராகி உள்ளது. பிரமோத் ஜெயா கதை, திரைக்கதை எழுதி இயக்கிய இந்த படம், விரைவில் திரைக்கு வருகிறது. படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது.
படத்தின் கதை குறித்து, பிரமோத் கூறுகையில், ''படத்தின் பெயரை கூறுவதை போன்று, இது ஒரு அழகான காதல் கதை கொண்டதாகும். படத்தின் காதல் பாடலுக்கு பிரசாத் ஷெட்டி இசை அமைத்துள்ளார். புதுமுகங்கள் ரஞ்சித், ஸ்பந்தனா சோமண்ணா ஜோடியாக நடித்துள்ளனர். இது இளசுகளுக்கான கதை கொண்டதாகும்,'' என்றார்.
