
* மராத்தி சென்றது ஏன்?
கன்னடத்தில் தாரக், மப்தி, அவனே ஸ்ரீமன் நாராயணா உட்பட பல்வேறு வெற்றி படங்களை கொடுத்த, நடிகை ஷான்வி ஸ்ரீவாத்சவை சமீபகாலமாக படங்களில் காண முடியவில்லை. தற்போது, மராத்தி திரையுலகுக்கு சென்றுள்ளார். இது குறித்து அவரிடம் கேட்ட போது, ''சமித் கக்கட் இயக்கும் ரான்டி திரைப்படம் மூலம், மராத்தி மொழியில் அறிமுகமாகிறேன். இம்மாதம் 22ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
''சரத் நாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் சமித்தும், நாயகன் சரத்தும் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள். அவர்கள் கதை கூறிய போது, எனக்கு பொருத்தமாக இருக்கும் என தோன்றியதால், நடிக்க சம்மதித்தேன். என் கதாபாத்திரத்தை மிக அழகாக காட்டியுள்ளனர்,'' என்றார்.
* விவாகரத்து ஏன்?
சிஷ்யா, குஷி உட்பட, பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சைத்ரா ஹள்ளிகேரி. பட வாய்ப்புகள் குவிந்து, புகழின் உச்சியில் இருந்த போதே, பாலாஜி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, நடிப்புக்கு முழுக்கு போட்டார். தற்போது இவர் இரண்டு குழந்தைகளின் தாய். இவர், கணவரை விவாகரத்து செய்ததாக கூறப்பட்டது.
இது குறித்து, சைத்ரா கூறுகையில், ''நான் விவாகரத்து செய்து கொண்டது உண்மைதான். பலரும் என்னை பற்றி, மனம் போனபடி பேசுகின்றனர். நான் அதை புறக்கணித்துவிட்டு, என் வாழ்க்கையில் முன்னோக்கி நடந்தேன். 17 ஆண்டுகளுக்கு முன், என் வாழ்க்கையில் இருந்த சந்தோஷம், இப்போது இல்லை. மக்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். அவரவர் வாழ்க்கையை, அவர்களே முடிவு செய்ய வேண்டும். பல வலி, வேதனைகளால் மனம் நொந்துள்ளேன்,'' என்றார்.
* முதல் படம்
அமைச்சர் ஜமீர் அகமது கான், ஒரு முறை யாரிடமோ 'கங்கிராஜுலேஷன் பிரதர்' என கூறினார். இந்த வார்த்தை பலரையும் கவர்ந்தது. தற்போது இதே பெயரை வைத்து, ஹரி சந்தோஷ் திரைப்படம் இயக்குகிறார். இது குறித்து அவர் கூறுகையில், ''சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. அமைச்சர் கூறிய வார்த்தையை, டைட்டிலுக்கு பயன்படுத்தினோம்.
''சின்னத்திரை நடிகர் ரக்ஷித் நாயகனாக, புதுமுகம் அனுஷா, சஞ்சனா தாஸ் நாயகியராக நடிக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன், நானும், சில நண்பர்களும் சேர்ந்து பட தயாரிப்பு கம்பெனியை துவக்கினோம். பல தொடர்களில் பணியாற்றிய நான் இயக்கும் முதல் படம் இதுவாகும். பெங்களூரில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது, என்றார்.
* அம்மா, சித்தி, பாட்டி
பாரதி பாலி தயாரிக்கும், நா நின்ன பிடலாரே திரைப்பட டிரெய்லர், சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களின் ஆர்வத்தை துாண்டியுள்ளது. இதில் பாரதி அம்பாலி நாயகியாக நடித்துள்ளார். கதை குறித்து அவரிடம் கேட்ட போது, ''நான் கலபுரகியை சேர்ந்தவள். நாடகத்தில் இருந்து, வெள்ளித்திரைக்கு வந்தேன். சில படங்களில் சிறு,சிறு கதாபாத்திரங்களில் நடித்தேன். இப்போது நாயகியாக வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குனர் நவீனும், நானும் ஐந்து ஆண்டு நண்பர்கள்.
''அவர் என்னிடம் படத்தின் கதை கூறினார். தயாரிப்பாளரை தேடினோம். என் அம்மா பாரதி பாலி, தயாரிக்க முன்வந்தார். என் அம்மா, சித்தி, பாட்டி பெயர்களை வைத்து, கே.யு.பி., புரோடக்ஷன் என்ற பெயரில் படக்கம்பெனி துவக்கி, படத்தை தயாரிக்கிறோம். இது சைக்கலாஜிக்கல், ஹாரர் கதை கொண்டது, என்றார்.
* மண்ணின் வழிபாடுகள்
தங்களின் மாறுபட்ட நடிப்பால், ரசிகர்களை ஈர்த்தவர்கள் நடிகர்கள் அச்யுத் குமார் மற்றும் கோபால கிருஷ்ண தேஷ்பாண்டே. தற்போது இவ்விருவரும், அன்தம்மா என்ற படத்தில் சேர்ந்து நடிக்கின்றனர். படக்குழுவினர் கூறுகையில், 'இந்த படத்தில் அச்யுத் குமார் அண்ணனாகவும், கோபால கிருஷ்ண தேஷ்பாண்டே தம்பியாகவும் நடிக்கின்றனர்.
''அண்ணன், தம்பியின் பாசப்பிணைப்பு, நமது மண்ணின் வழிபாடுகள், பழைய மைசூரு கலாசாரம், நம்பிக்கை, மூட நம்பிக்கை போன்ற விஷயங்களை மையமாக கொண்டு, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. ஆதிசுஞ்சனகிரி, நாகமங்களா, மாண்டியா, மத்துார் சுற்றுப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்படும்,'' என்றனர்.
* கற்க வேண்டியது அதிகம்
நடிகை பிரியங்கா உபேந்திரா நடிக்கும், லைப் ஈஸ் பியூட்டிபுல் திரைப்படம் டிசம்பர் 13ம் தேதி திரைக்கு வருகிறது. இவரது கணவர் உபேந்திரா, சமீபத்தில் ரிலீஸ் தேதியை அறிவித்து, படக்குழுவினரை வாழ்த்தினார்.
கதை குறித்து அவர் கூறுகையில், ''படத்தின் துணுக்குகளை பார்த்தேன். லிப்டுக்குள் நடக்கும் கதை. வாழ்க்கை கூட லிப்டை போன்று ஏறும், இறங்கும். எனவே கதைக்கு தகுந்தபடி டைட்டில் வைத்துள்ளனர். பிரியங்கா அற்புதமான கலைஞர். அவரிடம் இருந்து நான் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது,'' என்றார்.
***