
ஓ.டி.டி.,யில் ரிலீஸ்!
நடிகை மாலாஸ்ரீ பல ஆண்டுகளாகவே ஆக்ஷன் படங்களில் அதிக ஆர்வம் காட்டுகிறார். துாள் பறக்கும் சண்டைக் காட்சிகளில் அசத்துகிறார். இவரது நடிப்பில் சூப்பர் ஹிட்டான, மாரகாஸ்த்ரா திரைப்படம், ஓ.டி.டி.,யில் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, படக்குழுவினர் கூறுகையில், 'கோமளா நடராஜ் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். மாலாஸ்ரீ நாயகியாக நடித்துள்ளார். நாட்டில் துஷ்ட சக்திகளை ஒடுக்கும் சக்தி எழுத்துக்கு உண்டு, தீயவைக்கு எதிரான வலுவான அஸ்திரம் எழுத்து. சமுதாயத்துக்கு தேவையான, நல்ல அம்சங்களுடன் திரைக்கதை பின்னப்பட்டிருந்தது. இந்த படத்தில் ஆனந்த் ஆர்யா, மாதுர்யா, ஹர்ஷிகா பூனச்சா நடித்துள்ளனர். படத்தை ஓ.டி.டி.,யில் கண்டு ரசிக்கலாம்' என்றனர்.
நகைச்சுவை காதல் கதை!
நடிகர் ஹரிஷ் ராஜ், இயக்கி நடிக்கும், வெங்கடேஷாய நமஹ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு முன் இவர் இயக்கிய கோவிந்தாய நமஹ படம், சூப்பர் ஹிட்டானது. இதே உற்சாகத்தில், அடுத்த படத்தை துவக்கியுள்ளார்.
ஹரிஷ்ராஜ் கூறுகையில், ''இது, நகைச்சுவையான காதல் கதையாகும். இதில் நான் மென்பொறியாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். என் தாயாராக மூத்த நடிகை உமாஸ்ரீ நடித்துள்ளார். படத்தில் எட்டு நாயகியர் உள்ளனர். இதில் இருவருக்கு முக்கியமான கதாபாத்திரமாகும். முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இம்மாதம் 20ம் தேதி, இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துவக்க தயாராகிறோம். விரைவில் படப்பிடிப்பை முடித்து, திரைக்கு கொண்டு வருவோம்,'' என்றார்.
உண்மை சம்பவத்தில் படம்!
இயக்குனர் தருண் கிஷோர் சுதிர் தயாரிப்பில், புதிய திரைப்படம் தயாராகிறது. படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. இது குறித்து, அவரிடம் கேட்ட போது, ''மலை மஹாதேஸ்வரா மலையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. உணர்வு பூர்வமான கதையாகும். பாடலாசிரியரும், கதாசிரியருமான புனித் ரங்கசாமி, இப்போதே முதன் முறையாக இந்த படத்தை இயக்குகிறார்.
''நடிகை ரக்ஷிதாவின் சகோதரர் ராணா, நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நாயகனாகும் இரண்டாவது படமாகும். அவ்வளவாக பிரபலம் இல்லாத நாயகனை தேடிய போது, ராணா நினைவுக்கு வந்தார்,'' என்றார்.
பிப்., 21ல் விஷ்ணு பிரியா!
நடிகர் ஸ்ரேயஷ் மஞ்சு நாயகனாக நடிக்கும், விஷ்ணு பிரியா வரும் பிப்ரவரி 21ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கியுள்ளது. இது குறித்து, படக்குழுவினர் கூறுகையில், 'படப்பிடிப்பு முடிந்துள்ளது. திரைக்கு கொண்டு வர தயாராகிறோம். இந்த படத்தில் கீர்த்தி கிருஷ்ணா நாயகியாக நடித்துள்ளார். இவருக்கு வெயிட்டான கதாபாத்திரம் கிடைத்துள்ளது. அர்ஜுன் ஜன்யா இசை அமைத்துள்ளார். அனைத்து பாடல்களும் அற்புதமாக வந்துள்ளன. சாது கோகிலா, சந்திர பிரபா உட்பட பலர் நடித்துள்ளனர்' என்றனர்.
மென்பொறியாளர் பாத்திரம்!
மாடலும், நடிகையுமான பிரியங்கா குமார், பேட் மேனர்ஸ் திரைப்படம் மூலமாக, கன்னட திரையுலகில் நுழைந்தவர். தற்போது ரிஷி நாயகனாக நடிக்கும், ருத்ர கருட புராணா திரைப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். தன் கதாபாத்திரம் குறித்து, பிரியங்கா கூறுகையில், ''இந்த படத்தில் நாயகியாக வாய்ப்பு கிடைத்தது, என் அதிர்ஷ்டம். என் கதாபாத்திரத்தை இயக்குனர் நந்தீஷ் சிறப்பாக வடிவமைத்துள்ளார். எனக்கு திரில்லர் படங்களை பார்ப்பது மிகவும் பிடிக்கும். தற்போது இத்தகைய கதை கொண்ட படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
''என் பங்கு படப்பிடிப்பு என் சொந்த ஊரான மைசூரில் நடந்தது. எனவே படம் எப்போது திரைக்கு வரும் என, ஆவலோடு காத்திருக்கிறேன். படத்தில் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. இதில் நான் நடுத்தர குடும்பத்தின் மென் பொறியாளர் திவ்யா கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்,'' என்றார்.
கராத்தே வீரர் கதை!
டகரு பல்யா திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் நாகபூஷண் வித்யாபதி திரைப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இப்படம் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வருகிறது. இது குறித்து, இயக்குனர் ஹசீம் கான் கூறுகையில், படத்தில் நாகபூஷண் கராத்தே வீரராக நடிக்கிறார். கராத்தே மாஸ்டர் கதாபாத்திரத்தில் ரங்காயணா ரகு நடித்துள்ளார். மலைகா வசுபால் நாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். படத்தின் மற்றொரு இயக்குனர் இஷாம் கான், கதை, திரைக்கதை, எடிட்டிங் பொறுப்பையும் ஏற்றுள்ளார். படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது,'' என்றார்.